பிரதிபலனை எதிர்பாராமல் முடிந்ததை சுயநலமின்றி ஆற்றும் கடமையே சிறந்த சேவை என்ற நெறியை வற்புறுத்தும் நுால். தேவை தான் தீவிரமான தேடலுக்கு ஆயத்தப்படுத்தும். மனித உறவுகளை சரியான முறையில் நிர்ணயம் செய்து தேவைகளை பூர்த்தி செய்வது தான் சேவை எனக் குறிப்பிடுகிறது.
வெற்றிக்கு தேவைப்படுவது துாய்மை, நம்பிக்கை, விடாமுயற்சி. இலக்குகள் செயல்பட துாண்டும் நெம்புகோல். இலக்கு தெளிவாக திட்டவட்டமாக, நடைமுறைக்கு சாத்தியமாக இருத்தல் வேண்டும். அடிப்படையில் மனிதநேயம் இருந்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பிரச்னைகளை தீர்ப்பதும், ஆதரவாக இருப்பதும் மனித சமுதாயத்தில் உதவுதலின் அடிப்படை. பணமே வாழ்க்கை என்ற போக்கை மாற்றி, வாழ்வின் அர்த்தங்களை புரிந்து, பலவீனத்தை அகற்றி செயல்பட வலியுறுத்துகிறது. இலக்கை நிர்ணயித்து தன்னம்பிக்கையை வளர்த்து, ஒழுக்கத்தில் உயர்ந்து சேவை ஆற்ற வலியுறுத்தும் நுால்.
– புலவர் சு.மதியழகன்