சபரிமலையில் இனிமையாக தரிசனம் தரும் புகழ் மிக்க சுவாமி அய்யப்பன் வரலாற்றை எளிய நடையில் தரும் நுால். புரிந்து படிக்கும் வகையில் உள்ளது. பக்தி பரவசத்தை ஊட்டுகிறது. இதுவரை பார்த்திராத ஏராளமான படங்களை உடையது.
சுவாமி அய்யப்பனின் பக்தி பரவசமூட்டும் வரலாறு காட்சிப்பூர்வமாக சித்தரித்து எழுதப்பட்டுள்ளது. இந்த நுால் ஆசிரியர் பத்திரிகை துறையில் நீண்ட காலம் பணியாற்றியவர். அதனால், எளிமையான சொற்களை இயல்பான சித்தரிப்புக்கு பயன்படுத்தியுள்ளார்.
சுவாமி அய்யப்பன் பற்றி பல தரப்பு பெரியவர்கள், நீண்ட காலமாக சபரிமலையில் வழிபாடு செய்பவர்கள் வழியாக தகவல்களை திரட்டியுள்ளார். அய்யப்பன் கோவில், மாளிகைப்புறம் சன்னதியில் அய்யப்பனின் வரலாறு பறைக்கொட்டு பாடல்களில் தெரிவிக்கப்படுகிறது.
அவற்றையும் நன்றாக கவனித்து இந்த புத்தகத்துக்கு ஆதாரமாக கொண்டுள்ளார். சுவாமி அய்யப்பனின் புராண வரலாறும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அய்யப்பன் கோவிலில், ‘சுவாமியே சரணம் அய்யப்பா’ என்ற கோஷம் முழங்கும் வழக்கம் எப்படி ஏற்பட்டது என்ற தகவல் பரவசம் தருகிறது. சுவாமி அய்யப்பனுடன் தொடர்புடைய பல்வேறு புராணக் கதைகளும் விவரிக்கப்பட்டுள்ளன.
காஞ்சிப் பெரியவர் எழுதிய, ‘தெய்வத்தின் குரல்’ என்ற நுாலில், மூக்கில் விரல் வைத்து சிந்தனை செய்யும் சுவாமி அய்யப்பன் பற்றிய தகவல் வியப்பு மேலிட வைக்கிறது. பல்வேறு தரப்பு பக்தர்களுக்கும்திருப்தி தரும் வகையில் ஆராய்ந்து உண்மை தகவல்கள் தரப்பட்டுள்ளன.
சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்ய, தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் புறப்பட தயாராகி வருகின்றனர். அவர்களுக்கு இந்த புத்தகம் கூடுதல் பலன் தரும். பக்தியின் பாதையில் முத்தாய்ப்புடன் நடந்து செல்ல உதவும்.
அய்யப்ப பக்தர்கள் மனம் மகிழ வைக்கும் நுால்.
– இளங்கோவன்