மகாகவி பாரதியின் போராட்டம் நிறைந்த புகழ் வாழ்வை பறைசாற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நுால். சுயசரிதைகளுடன், நெருங்கிப் பழகியோர் அனுபவங்களும், கூர்ந்து நோக்கியோரின் ஆக்கங்களும் இடம் பெற்றுள்ளன.
பாரதியின் வாழ்வு டிசம்பர் 11, 1882ல் துவங்கி, செப்டம்பர் 11, 1921ல் நிறைவுற்றது. அது, தனி ஒரு மனிதனின் வாழ்வு அல்ல.
தமிழகம், இந்தியா, உலகம் என அளவில் விரிந்து பரந்து துலங்குகிறது. குறைந்த காலத்தில் அமைந்திருந்தாலும் ஒரு காலக்கட்டத்தை உள்ளடக்கியுள்ளதாக விரிகிறது. ஒரு வாழ்க்கை பலவாறாக பிரிந்து வரலாற்றுடன் பிணைப்பதை எடுத்துக்காட்டுகிறது.
புகழ் நிறைந்த பாரதியின் வாழ்வை பலரும் பல கோணங்களில் நோக்கி கண்டதையும், உணர்ந்ததையும் பதிவு செய்துள்ளனர். இதில் குடும்பத்தினர், உடன் பழகிய அனுபவங்களை உள்வாங்கியோர், எழுத்தாளர்கள், படைப்புகளை கூர்ந்து நோக்கியோர் என பல்வேறு வகையினர் உள்ளனர். தன் வாழ்வின் ஒரு பகுதியை இரு பிரிவாக சுவைமிகு கவிதைகளாக வடித்துள்ளார் பாரதி.
சுயசரிதை கவிதையாக பாரதி எழுதியவை முதல் வரிசையில் உள்ளன. எழுதிய காலத்தில் இருப்பது போன்றே மாற்றமின்றி பதிவாகியுள்ளன.
பாரதியின் மறைவுக்கு பின், அவரது நண்பர் நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், 1922ல் எழுதிய ஸ்ரீசுப்பிரமணிய பாரதியார் சரித்திர சுருக்கமும், பாரதியின் அரசியல் நண்பர் வி.சக்கரை செட்டியார் எழுதிய ராஜீய வாழ்வும் இடம் பெற்றுள்ளன. இவை அனுபவங்களின் சாரமாக மிளிர்கின்றன.
ஆக்கூர் அனந்தாச்சாரியாரின் கவிச்சக்கரவர்த்தி பாரதி சரிதம், மகாகவி மனைவி செல்லம்மா எழுதிய பாரதியார் சரித்திரமும் இணைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி வாழ்க்கையை காட்டும் வகையில் வ.ரா., எழுதிய மகாகவி பாரதியார் என்ற பதிவும் உள்ளது.
இவற்றுடன், வ.உ.சி.,யின் வி.ஓ.சி., கண்ட பாரதி, பாரதிதாசனின் புதுநெறி காட்டிய புலவன், ரா.கனகலிங்கத்தின் என் குருநாதர் பாரதியார், யாதுகிரி அம்மாளின் பாரதி நினைவுகள், சக்திதாசன் சுப்பிரமணியம் உருவாக்கிய பாரதியார் புதுமைக்கண்ணோட்டமும் இடம் பெற்றுள்ளன. மகாகவி வாழ்வு, பன்முக சிறப்பை வெளிப்படுத்தும் தொகுப்பு நுால்.
– ஒளி