அபூர்வாஸ் பப்ளிகேஷன்ஸ், 40/38, ஜாலான்துங்கு கிளானா, 41000 கிள்ளான், கிலாங்கூர், மலேசியா. (பக்கம்: 310).
வேதமுதல்வன் விநாயகப் பெருமான். வினை தீர்க்கும் வித்தகன் வல்லப கணபதி. பிரணவத்தின் மறுபதிப்பாக வீற்றிருப்பவன் மகா கணபதி. மகா கணபதியின் ஆராதனையும், உபாசனையும் இந்த மண்ணுலகிற்கு மிக மிகப் பழமையானது. `ஓம்' என்பது பிரணவ மந்திரம். அதன் நாத தத்துவத்தை சிறு கோடாக எழுதி, பிந்து தத்துவத்தைப் புள்ளியாக அதன் மேல் கழித்து இணைத்து `உ' என்ற பிள்ளையார் சுழியை எழுதிய பிறகே நாம் எதையும் எழுதத் துவங்குகிறோம். அந்த பிரணவஸ்ரூபமானவன் தான் மகா கணபதி. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த வேத முதல்வனாம் விநாயகப் பெருமானின் வரலாற்றினையும் பூஜை முறைகளையும் விரிவாக ஆழமாக ஆய்வு நோக்கோடு எழுதியுள்ளார் முனைவர் பரமசிவம்.இப்புத்தகம் மலேசியத் திருமண்ணிலே இருந்து மலர்ந்திருக்கிறது. பாரதத் திருநாட்டின் ஆன்மிக வித்து மலேசியத் திருநாட்டில் விருட்சமாய் வளர்ந்தும், இந்து மத சிந்தனைகளை அங்குள்ள நம் மக்களிடம் வளர்க்க, வழிகாட்டியாக விளங்கும் என்பதில் ஐயமில்லை . ஆதிமுதற்கடவுள் ஆனை முகத்தோன், கணபதியின் தத்துவம், திருவுருவங்கள் 32, படைக்களன், பீடங்கள், திருத்தலங்கள், கடல் கடந்த கணபதி, வேத, புராண, இலக்கிய, இதிகாசங்களில் கணபதி, கணபதி மந்திர ஸ்தோத்திரம் என 28 அத்தியாயங்களில் 310 பக்கங்களில் 15க்கும் மேற்பட்ட வண்ணப் படங்களுடன் வெளிவந்துள்ளது இப்புத்தகம். விநாயகப் பெருமானது வரலாறு, பூஜை முறைகள் என ஒட்டுமொத்தமான ஒரு கலைக்களஞ்சியம் போன்று இப்புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆய்வு மாணவர்களுக்கு இது பெரிதும் பயன்படக்கூடிய ஒரு ஆவணம், விநாயகருக்குரிய மந்திரங்கள், கணபதி ஹோமம், கணபதி மூலமந்திர த்ரிசுதி, நிவேதன மந்திரங்கள் என பல மந்திரங்களை சிறு விளக்கத்தோடு சிவாலய சிவாச்சார்யர்களுக்கும் பயன்படுகிற வகையில் ஆசிரியர் பதிவு செய்திருப்பது பாராட்டுதலுக்குரியது. `அருகும், வன்னியும்' என்ற தலைப்பில் ஒரு அத்தியாயத்தில் பல்வேறு மருத்துவ, அறிவியல், அருளியல் செய்திகளை பதிவு செய்திருப்பது ஆசிரியரது நுண்மான் புலமை பளிச்சிடுகிறது. அதே போல `குளோனிங்' வித்தையை விநாயகர் மூலம் விளக்குவது, சான்பிரான்சிஸ்கோவில் அமெரிக்கர் பூஜாரியாக உள்ள தகவல் ஆகியவை ஆசிரியரின் பரந்த பார்வைக்கு அடையாளம். மகா கணபதியைப் பற்றி இதுபோன்ற ஒரு நூல் அண்மைக் காலத்தில் வெளிவந்ததில்லை. ஆன்மிகக் கருவூலம், விநாயகப் பெருமானது ஒட்டு மொத்தமான தத்துவங்கள், வரலாறுகள், பூஜா விதிமுறைகள், மந்திரங்கள் அடங்கிய ஒரு ஞானக் களஞ்சியம். இத்தகைய ஒரு ஆன்மிகத் தொண்டினை மலேசிய நாட்டில் அங்குள்ள இந்து மத பெருமக்களுக்கு இதுபோன்ற படைப்புகள் வாயிலாக, அருட்பணி செய்து வருகிற நூலாசிரியர் பரமசிவம் பாராட்டுதலுக்கும், போற்றுதலுக்கும் உரியவர்.