'1992 டிசம்பர் 6-ம் தேதி, அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதன் விளைவாக எழுந்த கலவரங்களில் தேசமே அல்லோலகல்லோலப்பட்டது. மும்பை குண்டுவெடிப்புச் சம்பவம் தொடங்கி கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் வரை அயோத்தி விவகாரத்தின் பின்விளைவுகளை இன்றுவரை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
பிரச்னையின் வேரை மறந்துவிட்டு விளைவுகளுக்காக மட்டும் கவலைப்படும்படி ஆக்கிவிட்டது காலம்.
உண்மையில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ஒரு ராமர் கோயில் இருந்ததா? கோயிலை இடித்துத்தான் பாபர் மசூதி கட்டப்பட்டதா? இதுவரை அங்கே நிகழ்த்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் சொல்லும் முடிவுதான் என்ன? அகழ்வாராய்ச்சி முடிவுகளை அரசியல் பாதிக்கிறதா? என்றால், எத்தனை தூரம் பாதிக்கிறது? இது விஷயத்தில் இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகளின் வாதங்கள் என்னென்ன? அவர்களின் நிலைப்பாடுகள் எந்தெந்த விதங்களில் மாறி வந்திருக்கிறது?
நீதிமன்றத்தில் இன்றுவரை தீராததொரு வழக்காகவே இது இருந்துவருகிறது.
அயோத்தி பிரச்னையில் எந்தப் பக்கச் சார்பும் எடுக்காமல் உண்மை நிலையை, தக்க ஆதாரங்களுடன் நடுநிலைமையுடன் அலசி ஆராயும் முழுமையான நூல் இது. தீர்ப்பு ஏதும் சொல்வதல்ல இதன் நோக்கம். மாறாக, அவ்வப்போதைய வீரவசனங்களால் மூடி மறைக்கப்பட்ட உண்மைகளை எவ்வித ஜோடனையும் இல்லாமல் மக்கள் மத்தியில் மறுசமர்ப்பணம் செய்யும் ஒரு முயற்சி மட்டுமே.