இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் நுழைந்து அதிரடியாகத் தாக்குதல் நடத்தி, தேசத்தையே ஸ்தம்பிக்கச் செய்த காஷ்மீர் தீவிரவாத இயக்கம் லஷ்கர-ஏ-தொய்பா குறித்த மிக விரிவான அறிமுகத்தைத் தருகிறது இந்நூல்.
ஆப்கனிஸ்தானில் பிறகு, பாகிஸ்தானில் வளர்ந்து, இந்தியாவில் நாசகாரியங்கள் புரியும் இயக்கம் லஷ்கர்-ஏ-தொய்பா. மாபெரும் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் என்னும் பெருங்கனவு இருந்தாலும், லஷ்கரின் பெரும்பாலான செயல்திட்டங்கள் இந்திய எல்லைக்குட்பட்டவைதான்.
காஷ்மீருக்காகப் போரிடும் இயக்கங்களிலேயே மிகவும் பலம் வாய்ந்தது லஷ்கர். அல் காயிதா முதல் மத்தியக் கிழக்கின் அத்தனை தீவிரவாத போராளி இயக்கங்களுடனும் இவர்களுக்குத் தொடர்பு உண்டு. தவிரவும் பாக். உளவுத்துறை ஐ.எஸ்.ஐயின் பரிபூரண ஆசீர்வாதம்.
தனக்கென தனி ராணுவம், அரசியல் பிரிவு, உளவுத்துறை, நிதித்துறை என்று வைத்துக்கொண்டு கிட்டத்தட்ட ஓர் அரசாங்கம் போலவே செயல்படும் இயக்கம் இது.
1999-ல் கார்கில் யுத்தம் முதல் 2005-ல் மும்பை ரயில்களில் நிகழ்த்தப்பட்ட தொடர் வெடிகுண்டுத் தாக்குதல்கள் வரை பாகிஸ்தான் உளவு அமைப்பு இந்தியாவில் நிகழ்த்தியிருக்கும் அத்தனை திருவிளையாடல்களிலும் முழுமையாகவோ, பகுதி அளவிலோ லஷ்கர் சம்பந்தப்பட்டிருக்கிறது.
இந்தியாவை மிகவும் அச்சுறுத்தும் தீவிரவாத இயக்கங்களுள் முதன்மையானது லஷ்கர்-ஏ-தொய்பா. அதன் தொடக்கம் முதல் இன்றைய இருப்பு, செயல்பாடுகள் வரை மிக விரிவாக அலசி ஆராய்கிறது இந்நூல். ஆசிரியர் பா. ராகவன், குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் சர்வதேச தீவிரவாத இயக்கங்களின் நெட் ஒர்க் குறித்து தொடர்ந்து எழுதி வருபவர்.