விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
மலர்கள் இல்லாத உலகத்தை யாராவது நினைத்துப் பார்க்க முடியுமா...?
சுகமோ... சோகமோ... எதுவாக இருந்தாலும் அந்த இடங்களில் மலர்களுக்கு முக்கியத்துவம் கிடைத்துவிடும். பல சமயங்களில் நம்மை மனிதர்கள் என்று நினைவூட்டுவதே இந்த மலர்கள்தான். ஆம், மலர்களின் வாசனைக்கு மயங்காத மனிதர்களே இல்லை! உணவுப் பொருள்களைப் போலவே நம்முடைய வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட பல விஷயங்களில் ஒன்றுதான் இந்த வண்ண வண்ண மலர்கள்.
கத்தரிக்காய், முருங்கைகாய், நெல், கரும்பு என்கிற விவசாய விளைபொருள் வரிசையில் மலர்களும் விளைபொருட்கள்தான். என்றாலும், மலர்களின் விற்பனை என்பது தனித்தன்மை கொண்டது. நிறமும் மணமும் ஓரிரு நாட்களே உயிர் பெற்றிருக்கும் என்றாலும், திருமணம் மற்றும் பூஜைக்கான பொருளாக மதிக்கப்படுவதால் மலர்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மலர்ச் சந்தை என்பது உள்ளூரில் மட்டுமல்ல... உலக அளவிலும் மிகமிகப் பெரியது!
இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, மலர் சாகுபடியை கையில் எடுத்து, வெற்றி வாசம் வீசியபடி வலம் வரும் விவசாயிகள் தமிழக அளவில் நிறையவே இருக்கிறார்கள்.
அந்த விவசாயிகளின் சாகுபடி அனுபவங்கள் மற்றும் சாகுபடி தொழில்நுட்பங்கள் பசுமை விகடன் இதழில் தொடர்ந்து இடம்பிடிக்கிறது.
இந்த அனுபவங்கள், பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகள் உட்கார்ந்து படித்து பெறும் பயிற்சியைவிட பலமடங்கு மேலானவை என்பதில் சந்தேகமே இல்லை. அந்த வகையில், இந்த வெற்றி விவசாயிகளின் அனுபவங்கள் இங்கே புத்தகமாக விரிகிறது உங்களுக்காக!
இதையே பயிற்சிக் களமாகக் கொண்டு, நீங்களும் வெற்றிபெற வாழ்த்துக்கள்!