சின்ன வயதிலேயே, காலராவில் தாய், தகப்பனாரை இழந்து விடுகிறான் ராமண்ணா. ஜோசியர் நீலகண்ட சாஸ்திரி தம்பதி, அந்தப் பையனை எடுத்து வளர்த்து ஆளாக்குகின்றனர். ராமண்ணா, சமையல் சாம்புவிடம் பல ஆண்டுகள் கல்யாண சமையலை கற்றுக் கொண்டு, நண்பர் ஒருவர் துவங்கும் மெஸ்சிற்கு ஒர்க்கிங் பார்ட்னராக சேர்கிறார்.
சென்னையில் ஒரு பெரிய ஓட்டலை விலைக்கு வாங்க, லாட்டரிச் சீட்டில் விழுந்த பணம் உதவுகிறது. பங்களா, கார், நல்ல மனைவி என்று இல்லறம் நல்லறமாக நடக்கிறது. கடைசியில், மனைவி நெறி தவறும்போது, இல்லறத்தை வெறுத்து துறவி ஆகிறார் ராமண்ணா.
இந்த நாவலை, மிக நுணுக்கமான தகவல்களோடு, சொற்சித்திரமாக தீட்டியுள்ளார் டி.கே.மணி. கதையில் வரும் ஒரே ஒரு கெட்ட பாத்திரம், ராமண்ணாவின் மனைவி மட்டும் தான். இந்த நாவல், உழைப்பின் உயர்வை பேசுகிறது; சமையல் கலையின் ரகசியங்களையும் சொல்கிறது.
எழுத்தாளர் ஜெயகாந்தனை துரோணராக வரித்துக்கொண்ட ஏகலைவன் டி.கே.மணி, தன் இலக்கிய பயணத்தில் வெற்றி அடைந்து, இலக்கை தொட்டிருக்கிறார்.
எஸ்.குரு