ஐந்தாம் வேதமான மஹாபாரதத்தில், பீஷ்மாச்சாரியார், தருமபுத்திரனுக்கு பகவானை அர்ச்சிக்கத் தக்க, ஆயிரம் திருநாமங்களைச் சொன்னார். அந்த நாமங்களுக்கான விளக்க உரை தான் இந்த நூல். விஷ்ணு ஸஹஸ்ர நாமத்திற்கு, அத்வைத நோக்கில் ஆதிசங்கரரும், விசிஷ்டாத்வைத நோக்கில் பராசர பட்டரும், துவைத மத நோக்கில் ஸத்யஸந்த தீர்த்தரும் விளக்கங்கள் எழுதியுள்ளனர். ஒவ்வொரு நாமத்திற்கும், அந்த மூவரின் விளக்கங்களையும் தருகிறது இந்த நூல். ஆதிசங்கரர், விஷ்ணுவின் பல நாமங்களுக்கு, ‘மாயை’ என்ற சொல் கொண்டு விளக்குவதும் (பக். 4), பல நாமங்களின் உரையில் திருமகளோடு கூடியவன் என்று விளக்குவதும் (பக். 6), பராசர பட்டர், 44 தளங்களாக, 1000 நாமங்களை உரை செய்வதும் (பக். 52), ஸத்யஸந்தர், 1011 நாமங்களாக கொண்டு விளக்குவதும் (பக். 88), குறிப்பிடத் தக்கவை. இந்த நூலில், சங்கர பாஷ்யத்தின் உபோத்காதச் சுருக்கத் தமிழ் விளக்கமும் (பக்.26), பராசர பட்டரின் பகவத் குண தர்ப்பணத்தின் தமிழ் விளக்கம் (பக். 30), சமஸ்கிருத எழுத்துக்களின் அகரவரிசையில் நாமங்கள், அவற்றின் எண்கள் (பக்.53) ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பு.
கலியன் சம்பத்து