பள்ளிப் பாடத்தில் திருக்குறள் முழுவதையும் சேர்க்க வேண்டும் என்று மதுரை கிளை, உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொது நல வழக்கு எண் WP(MD)11999/2015க்கு, நீதிபதி மகாதேவன், பள்ளிப் பாடத்தில், 6 முதல், பிளஸ் 2 வகுப்புக்குள் திருக்குறள் அறத்துப் பாலையும், பொருட்பாலையும் முழுமையாகச் சேர்க்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
இத்தீர்ப்பில் மெக்காலே கல்வி முறையும், அதனால் பண்பாடு உருவாகவில்லை, நீதிநெறி முறைகள் பின்தங்கி விட்டது என்பன போன்ற கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைத்து, பல சான்றோர்களின் சிந்தனைகளையும், 50க்கும் மேற்பட்ட குறட்பாக்களையும் தீர்ப்பில் விளக்கி, மகாதேவன் தீர்ப்பே ஒட்டு மொத்த மக்களின் தீர்ப்பாக ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பளித்தார்.
தமிழ்மொழி உணர்வோடும், பண்பாட்டு வேர் பட்டுப் போகாமலும் காக்க, அரசு, நீதிபதி மகாதேவனின் தீர்ப்புரையைச் செயல்படுத்தி, மாணவர்களை நல்வழிப்படுத்த திருக்குறளே வழி என்று இந்நூல் மூலம் நிறுவியுள்ளார் நூலாசிரியர்.
நீதிபதி மகாதேவனின் திருக்குறள் புலமையைப் பறைசாற்றும் முழு தீர்ப்பும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது சிறப்பு.
பின்னலூரான்