பணமே, அட பணமே!
வாழ்க்கையில் திறமையோடு, பெரிதாகச் சம்பாதித்த பலரது பிற்கால வாழ்க்கை பொருளாதார ரீதியாக மிகவும் துயரமாகி விடுவதைக் காண்பதுண்டு.
சாதாரண சம்பாத்தியம் மட்டுமே உள்ள பல சாமானியர்களோ, மூப்படைந்த காலத்திலும் போதுமான வசதிகளோடு மகிழ்ச்சியாக வாழ்வதுண்டு. வாழ்வின் எந்தக் காலகட்டத்திலும் பணம் அவசியமாகிறது.
வருவாய் ஈட்டும் காலத்திலேயே தனக்கென்று நிதி ஆதாரம் உருவாக்கிக் கொள்ளும் புத்திசாலித்தனத்துக்கு ஏற்பவே பிற்கால வாழ்க்கைத் தரமும் ஒருவருக்கு அமைகிறது என்பதை அழுத்தமாக முன்வைக்கிறார் நூலாசிரியர் வ.நாகப்பன்.
ஆனந்த விகடனில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
இன்றைய சேமிப்புகள், தொடரவிருக்கும் வருமானம், எதிர்கால விலையேற்றங்கள் போன்றவற்றை நினைவில் இருத்தி, எதிர்கால பொருளாதாரத்தை திட்டமிடும் சாத்தியங்களும், நிதி திட்டமிடுதலில் ஏற்படும் சிக்கல்களும் நூலில் உதாரணங்களோடு விளக்கப்படுகின்றன.
உடல் மற்றும் உடைமைகளுக்கான தனிமனித காப்பீட்டுத் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கும் உத்திகளும் தரப்பட்டுள்ளன.
வருமான வரி சார்ந்த சேமிப்புகள், வரிவிலக்கு முதலீடுகள், முதலீடு செய்வதற்கான வரம்புகள், இதர வரிச் சலுகைகள் போன்றவற்றின் விளக்கங்கள், புதிய முதலீட்டாளர்களுக்கு விழிப்பை ஏற்படுத்தும்.
தங்கத்தில் செய்யும் முதலீட்டின் பயன்கள், தங்கப் பத்திரங்கள், பல்வேறு ஆதாயங்கள், கடன் பத்திர முதலீடுகள், பங்குச் சந்தை முதலீடுகள், மியூச்சுவல் பண்ட் முதலீடுகள் மீதான சுருக்கமான விளக்கங்களும் நூலில் உண்டு.
மலிவு விலைப் பொருட்களை வாங்குவோரின் மனோநிலைகள், பயனற்ற ஆடம்பரப் பொருட்கள் வாங்கிக் குவித்தல், வீண் செலவுகள் எந்தெந்த வகையில் ஒரு குடும்பத்தின் பொருளாதாரத்தைச் சுருக்குகின்றன என்பனவற்றையும் கூறுவது நல்ல எச்சரிக்கை.
–
மெய்ஞானி பிரபாகரபாபு