மற்றவர்கள் புரிந்துகொள்ளும் வகையில், அறிவியல் தகவல்களை கதையுடன் கலந்து, எளிமையான ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. ஒரு குழந்தை கருவறையில் வளர துவங்கிய பின், அது அடையும் உணர்வு, உறுப்பு வளர்ச்சியை அழகாக விவரித்துள்ளது. வெளிநாட்டில் நடக்கும் கதையாக இருந்த போதும், இந்திய கலாசாரத்தை சிலாகித்துள்ளது. வெளிநாட்டுக்கு வேலைதேடி செல்லும், இளைஞர்களின் தற்கால மனநிலையை விளக்குவதாக, இந்த நுால் அமைந்துள்ளது.
இந்தியாவில் பண்பாடு, கலாசாரம் பின்பற்றும் குடும்பத்தில் பிறந்த ஒருவன், லண்டனில் வேலை செய்யும் போது, அங்குள்ள, ஐரிஷ் பெண்ணை திருமணம் செய்கிறான். அவளுக்கு, குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்பதால், கருப்பின பெண்ணை வாடகை தாயாக அமர்த்துகிறான்.
நம் நாட்டு பெண்ணை மணக்காததால், வருத்தத்தில் இருந்த பெற்றோர், தன் மகளின் திருமண நிச்சயதார்த்தத்திற்கு அவனை அழைக்கின்றனர். கருவை சுமக்கும் பெண்ணும் இந்தியா வருகிறார். அவர் சந்திக்கும் காட்சிகளை, கருவறையில் இருந்த குழந்தை உணர்கிறது.
வெளிநாட்டிற்கு திரும்பி சென்றதும், கருப்பின பெண் விபத்தில் சிக்கி, மூளை செயலிழக்கிறாள். கருப்பையில் இருக்கும் குழந்தை எடுக்கும் முடிவே, கதையின் கிளைமாக்ஸ். இது, அறிவியல் கலந்த புனைவு.
இந்த நவீன புதினத்தை எழுதியுள்ள திரு. கிருஷ் ராமசுப்பு, ஒரு மருத்துவர். இந்தியாவில் பிறந்து வளர்ந்த இவர் 40 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து சென்று மருத்துவ பணி செய்து வருகிறார். சிறு நீரக மருத்துவ நிபுணரான இவர், ஆத்மா, கூடு விட்டு கூடு பாய்தல் போன்றவற்றில் ஆர்வம் கொண்டவர். அத்துடன் இவர் சமுதாயம், மக்களின் கலாச்சாரத்தில் கொண்டுள்ள ஈடுபாட்டுடன் வெளிப்பாடே இந்த நூல் உருவாக காரணமாக அமைந்ததென்றால் அது மிகையாகாது. இவருடைய இந்த முதல் படைப்பே, இவர் இந்தியாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பெற்ற அனுபவத்தைக் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.