தேசியம், தெய்வீகம் ஆகியவற்றை பரப்பும் வார இதழ், ‘விஜயபாரதம்’ தொடர்ந்து தீபாவளி மலர்களை வெளியிட்டு வருகிறது.
முதல் மலரில், தாமிரவருணிப் பெருமையைக் காட்டும் விதமாக அகத்தியர் திருவுரு தாங்கிய வண்ண அட்டையைக் காணலாம். இருளைக் கிழித்து ஒளியைப் பரப்பும் நாள் தீபாவளி என்பதை முகப்புக் கட்டுரை காட்டுகிறது.
இம்மலர் நம் நாட்டின் நதிகள், அதன் பெருமை, அதன் புராண காலத் தகவல்கள் என்ற வகையில், பல எழுத்தாளர்கள் எழுதிய தகவல்கள் சிறப்பானவை. அதில் கவிதைகளும் அடக்கம்.
மழை பற்றிய ஆய்வுக் கட்டுரையில், ஆய்வாளர் ஹரி, ‘ஒரு வருடத்தின், 8,760 மணி நேரத்தில், 100 மணி நேரம் தான் மழை பெய்கிறது’ என்ற தகவல், மழைநீர் சேமிப்பை வலியுறுத்தும் கருத்தாகும். தவிரவும் தமிழகத்தில், 200 ஆண்டுகளுக்கு முன், 50 ஆயிரம் ஏரிகள் இருந்ததாகவும், இப்போது, 7,000 ஏரிகள் மட்டுமே உள்ளதாக கூறப்படும் தகவல் அதிர்ச்சியடைய வைக்கும். மதுராந்தகம் ராமன் காத்த ஏரி பற்றிய சுவையான கட்டுரையும் இவற்றில் அடக்கம்.
இரண்டாவது மலரில், பயணக் கட்டுரைகள், நேர்காணல்கள், தேவிபாலா உட்பட பல முன்னணி எழுத்தாளர்கள் படைப்புகள் உள்ளன.
கார்ட்டூனிஸ்ட் மதி நெல்லைக்காரர் என்பதில் உள்ள பெருமிதம், சிந்தையின் திருகலை அகற்ற இறைவனடி பற்றுவதே உபாயம் என்பதை, ‘மலர்மிசை ஏகினான்’ என்ற குறள் பா மற்றும் பக்தி இலக்கியத்தின் வழி உணர்த்தும் குடவாயில் பாலசுப்பிரமணியத்தின் கட்டுரை, சிரிப்பு வெடி என பல சிறப்புகளுடன் மலர் மிளிர்கிறது.