இறைவனின் அன்பு எல்லையில்லாதது. படித்தவர், உயர்குலத்தவர் என்றெல்லாம் இறைவன் பகுத்தறிந்து அன்பை தருவதில்லை; பெறுவதும் இல்லை. எளிமையும், எல்லையில்லா சரணாகதியும் தான் இறைவனை மனித உடலுக்கு ஒன்றச் செய்கிறது. அதிலுள்ள உயிரை உருக்கி தன்னை நோக்கி வரச் செய்கிறது. படிக்காவிட்டாலும் எளிமையான காளி பக்தியால் தன்னை உயர்த்திய ராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றிய வரலாறு இது.
காளியின் அருளால் அனைத்து மதங்களின் சாராம்சங்களையும் முழுமையாக அறிந்தவர். அனைத்தும் காட்டும் வழி ஒன்றே என பக்குவப்பட்ட மகான், பகவான் என்றழைக்கப்பட்டவரின் எளிய வாழ்க்கை நம்மை பிரமிக்க வைக்கிறது. ஆன்மிக புருஷர் விவேகானந்தரின் குரு. இல்லறத்திலும் பற்றற்ற துறவறம் மேற்கொள்ளலாம் என வாழ்ந்து காட்டிய மகா புருஷர். மனைவியை மனுஷியாக கூட பார்க்கும் மனப்பான்மை இல்லாத உலகத்தில் தான் வணங்கும் தெய்வமாக நினைத்து வழிபட்டு வாழ்ந்த அந்த மகானின் வாழ்க்கை... வாழும் உதாரணம். ஆசிரியர் பா.சு. ரமணனுக்கு பாராட்டுகள்.
– எம்.எம்.ஜெ.,