காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, 370ம் சட்டப்பிரிவு உருவாகியது முதல், வீழ்ந்தது வரையிலான முழு விபரங்களையும் தொகுத்து ஆவணப்படுத்தியுள்ள நுால். இந்த சட்டப்பிரிவின் எழுச்சியும், வீழ்ச்சியும் என்ற கருத்தாக்கத்தில் எழுதியுள்ளார், தமிழக முன்னாள் அமைச்சர் டாக்டர் எச்.வி.ஹண்டே. ஆங்கிலத்தில் ஏழு அத்தியாயங்களில் படைக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் என்ற ஒற்றைச் சொல்லில், மூன்று பெரும் பிரிவுகள் உள்ளன. இங்குள்ள ஜம்மு பகுதியில் பெரும்பான்மை இந்துக்கள்; காஷ்மீர் பகுதியில் முஸ்லிம்கள்; லடாக் பகுதியில் பவுத்த சமயத்தவர் அதிகமாக வசிக்கின்றனர். கில்கித், பலுசிஸ்தான் பகுதிகளை, அண்டை நாடான பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது.
விடுதலை பெற்றபோது, இந்தியாவுடன், காஷ்மீரை இணைக்க உருவாக்கப்பட்டது தான் சட்டப்பிரிவு 370. இதன்படி, ராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு அல்லாத எந்த நடவடிக்கையையும், காஷ்மீர் ஏற்க வேண்டியது இல்லை. இந்தியாவின் பிற பகுதியினர், காஷ்மீரில் நிலம் வாங்க முடியாது; காஷ்மீர் பெண், வேற்று மாநிலத்தவரை திருமணம் செய்தால், அங்குள்ள நில உரிமையை இழப்பார்.
இந்திய அரசியல் சாசன சட்ட வரைவுக் குழு தலைவராக இருந்த டாக்டர் அம்பேத்கர், மத்திய அமைச்சராக இருந்த பட்டேல் போன்றோருக்கு இதில் உடன்பாடு இல்லை. இந்த சட்டப்பிரிவு அக்டோபர் 1949ல், பார்லிமென்ட் ஒப்புதல் பெற்றது. 70 ஆண்டுகளுக்கு பின், ஆகஸ்ட் 2019ல் இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டு, ஜம்மு – காஷ்மீர் என அழைக்கப்பட்ட பகுதி, இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த, 370 சட்டப்பிரிவை ஏற்காததில் முதன்மையானவர், ஷியாமா பிரசாத் முகர்ஜி. அவரைப் பற்றிய செய்திகளை, நுாலின் ஏழாம் அத்தியாயம் எடுத்துரைக்கிறது. சர்தார் பட்டேல் உள்துறை அமைச்சராகவும், ஜவகர்லால் நேரு பிரதமராகவும் இருந்தபோது அமலான இந்த சட்டப்பிரிவை, நரேந்திர மோடி பிரதமராகவும், அமித் ஷா உள்துறை அமைச்சராகவும் பதவி வகிக்கும் போது நீக்கியுள்ளனர்.
இந்த காலக்கட்டத்துக்குள் நடந்த நிகழ்வுகளை ஆவணப்படுத்தியுள்ளது நுால். இது தொடர்பாக, அரசியல் தலைவர்கள் எழுதிய கடிதங்களை அப்படியே வழங்கியுள்ளார். இந்தியா விடுதலை பெற்றது முதல், இன்று வரை உள்ள அரசியல் நிகழ்வுகளை கண் முன் நிறுத்துகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த நுாலை பாராட்டி, கடிதம் எழுதியுள்ளார்.
– முகிலை ராசபாண்டியன்