இயற்கை வடிவமைத்த திருமண உறவின் அருமைகளைப் பாலியல் வேட்கையின் பின்னணியில் உலகளாவிய பார்வையில் ஆய்ந்து, நோபல் பரிசு பெற்ற அறிஞர் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் எழுதிய ஆங்கில நுாலின் மொழிபெயர்ப்பு வடிவம்.
பாலியல் உறவு என்பது உணவு, குடிநீர் மீதான வேட்கை போன்றதே என முன்மொழிந்து, உணர்வியல் போக்குகளை உற்றுநோக்கி, மூட நம்பிக்கைகளை முற்றிலும் மறுதலித்துத் தெளிவான கண்ணோட்டத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடக்க கால சமூகத்தில் தனிநபர் உணர்வு, காதல், குடும்பம், நாடு எனும் பல அடுக்கு நிலைகளில் பாலியல் ஒழுக்க நெறிகள், மாறுபட்ட தாக்கத்திற்கு உள்ளாவதை விளக்கி, சமூகத்தின் அறிவுப் பரப்பிற்கேற்ப பாலியல் நெறி மாறுபடுவது விவரிக்கப்பட்டுள்ளது.
பல நுாற்றாண்டுகளாக குடும்பங்களில் பழகி வரும் தந்தை உணர்வு, தாய்மாமன் உரிமை, தாய் வழிச் சமூக காலத்திற்குப் பின் வந்த தந்தை வழிச் சமூக அமைப்பு ஆகியவை பெண்களின் ஒழுக்கத்தில் ஏற்படுத்திய தாக்கம், மத வழிபாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் போன்றவற்றை உற்று நோக்கி, உலகின் வெவ்வேறான இனக் கோட்பாடு, பண்பாடுகளை அறிவியல் முறையில் விளக்கியுள்ளது.
புனித துறவி, பெண்களிடையே அழகியல் மீதான மறுப்புப் பார்வைகள் நிலவியது வியப்பை உண்டாக்குகின்றன. குறிப்பிட்ட கிறிஸ்துவக் குழுக்களின் புனித கோட்பாட்டால் மண வாழ்க்கைக்கு எதிரான துறவு மனப்பான்மை பெருகி, குடும்ப வாழ்க்கையைத் தகர்க்கும் சூழல் உருவாகியது.
கணவன் – மனைவியரை கட்டாயத் துறவுக்கு இணங்க வைத்த வரலாறு, மதங்களில் வேரூன்றியிருந்த பிற்போக்குத் தன்மையைப் புலப்படுத்துகிறது. வளரிளம் பருவத்தில் செயற்கையாக ஏற்படுத்தப்படும் பாலியல் அறியாமை, பெற்றோரின் எதிர்மறைத் தடைகள், பெரியவர் பாலியல் உறவு மறைப்பால், குழந்தை நடத்தையில் ஏற்படும் உளவியல் மாற்றம், நிர்வாணம் மீதான பார்வை போன்றவையும் விளக்கப்பட்டுள்ளன.
மண உறவுகள் மற்றும் உளவியல் தொடர்பான உலகின் தலைசிறந்த அறிஞர்களின் மேற்கோள்களை உள்ளடக்கியுள்ளது; தற்கால வாழ்வியல் சூழல் ஆய்வுகளில் மாறுபட்ட சிந்தனையை தோற்றுவிக்கும்.
– மெய்ஞானி பிரபாகரபாபு