‘நிம்மதி’யான வாழ்க்கைக்கு நல்வழிகாட்டி! ஒரு மனிதன் தன்னை உணர, சில தேவைகளைப் பெற்றாக வேண்டும். உளவியல் அறிஞர் ஆப்ரஹாம் மாஸ்லோவின் உயிர், பாதுகாப்பு, உணர்வு பரிமாற்றம், நிலைத்திருத்தல், உணருதல் சார்ந்த தேவைகளை, இந்நுாலில் அழகாக விளக்குகிறார் க.விஜயகுமார்.
தேவையேயில்லாமல் சிலர் பிறக்கின்றனர்; தேவைகளை தேடி சிலர் வாழ்கின்றனர்; தேவைகள் கிடைக்காமலேயே சிலர் மறைகிறார்கள். எதிர்பார்ப்புகளுக்கும், ஏமாற்றங்களுக்குமிடையே மனப்பிரச்னை இருக்கிறது. ஆங்கிலத்தில் STRESS என்கிற வார்த்தைக்கு, ‘மன அழுத்தம்’ என்று பொருள். மன அழுத்தமில்லாத வாழ்வொன்று தான், இங்கு எல்லாரின் கனவாக இருக்கிறது.
ஆசைகளுக்கும் அடைவதற்கும் இடையே வெற்றி இருக்கிறது. தேவைகளுக்கும் கிடைத்தவற்றுக்கும் இடையே மகிழ்ச்சி இருக்கிறது. ஆனால், கிடைத்தவற்றை ஏற்றுக்கொள்வதில் தான் திருப்தி இருக்கிறது.
எண்ணங்கள் வார்த்தைகளாகவும், வார்த்தைகள் செயல்களாகவும், செயல்கள் நடத்தையாகவும், நடத்தை ஒரு மனிதனின் தலைவிதியாகவும் மாறுவதால், ஒரு மனிதனின் எண்ணங்கள் எந்தளவுக்கு ‘மன அழுத்தத்திற்கு’ காரணமாகின்றன என்பதை, உதாரணங்களுடன் விளக்குகிறது இந்நுால்.
ஒருவர் தமக்கு மன அழுத்தம் ஏற்பட்டிருக்கிறதா என்பதை, சுயமாக அறியும் வகையில் விளக்கியிருப்பது நுாலின் சிறப்பு. ‘நிம்மதி’ நுால், மனதை வளப்படுத்தும்; வாழ்க்கைக்கும் நல்வழிகாட்டியாக அமையும்.
– டாக்டர் டி.வி.அசோகன்