ஆசிரியர்-இரத்தின நடராசன். தன்னம்பிக்கை நூல். வெளியீடு: ஏகம் பதிப்பகம்,அஞ்சல் பெட்டி எண்:2964, 3,பிள்ளையார் கோயில்தெரு,2 ம் சந்து, முதல் மாடி,திருவல்லிக்கேணி, சென்னை-600 005.பக்கங்கள்:240.இவ்வுலகில் நான் ஒரு முறைதான் வாழப் போகிறேன்.அதனை நான் வெறும் குமாஸ்தாவாகக் கழிக்க விரும்பவில்லை.நான் ஒரு எழுத்தாளனாக,நாடக ஆசிரியராக, நாவலாசிரியராக எனது வாழ்க்கையைக் கழிக்க விரும்புகிறேன் என்று கூறி வேலையை உதறி எறிந்து விட்டு வெளியே வந்தார்.ஒன்பது ஆண்டுகள் எழுதினார்; ஓர் எழுத்து கூட வெளிவரவில்லை. ஆனால் அதற்குப்பிறகு அவர் வாயினின்று வெளிவந்த வார்த்தைகளனைத்தும் வைர வார்த்தைகளாகக் கருதப்பட்டன. அவர் தான் ஜார்ஜ் பெர்னார்ட்ஷா. வாழ்க்கையில் வெற்றி என்ற புத்தகத்தை அப்துற் ரஹீம் என்பவர் எழுதியுள்ளார். அப்புத்தகத்தின் தொடக்கத்தில் இந்நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுள்ளார்.சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னால் நான் வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் பயின்ற போது இப்புத்தகத்தைப் படித்தேன்.என்னுள் இது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.இந்த வரிசையில் தன்னம்பிக்கையை வளர்க்கக்கூடிய புத்தகங்கள் பல வந்துள்ளன.இதைப் போன்ற ஒரு புத்தகத்தை எழுத வேண்டும் என்ற எனது தாகமும்,மாணவர்களை பலவகையில் நல்வழிக்குக் கொண்டு வந்து உயர்த்த வேண்டும் என்ற தணியாத மோகமும் ஒன்று சேர்ந்ததின் விளைவு தான் இதில் எழுதப்பட்டவைகள்.