முதியோருக்கு வரும் உடல், மன ரீதியான உபாதைகளுக்கு தீர்வுகளை முன் வைக்கும் நுால். மருத்துவ சிகிச்சையளித்த நீண்டகால அனுபவ அறிவால் எழுதப்பட்டுள்ளது. உளவியல் ரீதியாக உடலையும், மனதையும் அணுகி பிரச்னையின் ஆழத்தை எடுத்துரைக்கிறது.
முதுமை கால தனிமை, உளவியல் ரீதியாக ஏற்படும் மன பாதிப்பு, நோய் பற்றி எல்லாம் அலசுகிறது. வாசிப்பவருடன் இயல்பாக உரையாடுவது போல் கருத்துகள் உள்ளன. பெரும்பாலான சிக்கல்களை, நோயாளிகளுக்கு சிகிச்சை தந்த அனுபவத்திலிருந்து அணுகியுள்ளது. நடைமுறைக்கு உரியதான தீர்வுகளை தெளிவாக தருகிறது.
முதுமையின் தனிமை, அதை அணுக வேண்டிய முறை, நோய்களை அணுகாமல் இருக்க கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை வாழ்வியல் பற்றி விளக்குகிறது. முதுமையில் வாடுவோர் குடும்ப உறுப்பினர்களுக்கும் உரிய ஆலோசனைகளை தருகிறது.
சிறு சிறு தலைப்புகளில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. உரையாடல் நடையில் உள்ளதால், சுவாரசியமாக வாசிக்க முடிகிறது. முதியோருக்கு முக்கியத்துவம் தருவதுடன், நலமிக்க சமுதாயத்துக்கான வழிமுறையை தெரிவிக்கும் பயன்மிக்க நுால்.
– மலர்