மனக் குழப்பங்களை பல்வேறு நிகழ்வுகள் மூலம் எடுத்துக்காட்டி, சரியாக புரிந்து செயல்படுவது பற்றி விவரிக்கும் நுால். மதிப்பைக் கூட்டுவதும், குறைப்பதுமான செயலை செய்வது மனம்; அதை அதன் போக்கில் விடாமல் கட்டுப்படுத்தி வாழ்வதே பக்குவப்படுதல் என விளக்குகிறது. மனம் தான் உடலின் எஜமான் என்கிறது.
கைப்பந்தாட்ட வீரர் அருணிமா சின்கா, கால் இழந்த நிலையிலும், உலகின் மிக உயரமான சிகரங்களில் ஏறி தேசியக் கொடியை பறக்க விட்ட நிகழ்வை உதாரணமாகக் காட்டுகிறது.
ஒன்றின் மீது முழுமையாக சிந்தாமல் சிதறாமல் குவிக்கப்பட்ட கவனமே ஆற்றல் என்றும், எதைச் செய்கிறோம் என்பது ‘டெலஸ்கோப்’ பார்வை என்றும், எப்படி செய்கிறோம் என்பது ‘மைக்ராஸ்கோப்’ பார்வை என்றும் விளக்குகிறது. மனதை புரிந்து கொள்ள, கைக்கொள்ள, கட்டுப்படுத்தி ஆளுமை செய்ய உதவும் அற்புதமான நுால்.
– புலவர் சு.மதியழகன்