வேறுபட்ட சூழல்களில் நடைபெற்ற நிகழ்வுகளுக்குத் தீர்வுகளை உரைக்கும் விதமாக புனையப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். பழங்குடியினர் உரிமைகளையும், உடைமைகளையும் மீட்டெடுத்த போராளியை விளக்குகிறது பூமி சிறுகதை.
உலகெங்கும் பெண்ணியம் பேசப்படும் சூழலில், பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பே கோவில்களில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் போற்றப்பட்டனர் என்பதை படிமமாக விளக்கும் அர்த்தநாரீஸ்வரர் பற்றிய கதை; காதல் மணத்தை மறுத்து, பின் ஏற்றுக் கொள்ளும் பெற்றோர்; தொல்லியல் துறைக்கே அர்ப்பணித்த தந்தையை மறைவிற்கு பின்னும் ஆழ்மன நிலையில் சந்தித்த காவேரி என கதை மாந்தர்கள் உள்ளனர்.
திருநங்கையர் எதிர்கொள்ளும் பிரச்னைகள், இணையதள விபரீதத்தால் திறன் வாய்ந்த புகைப்பட கலைஞர், மன அழுத்தத்திற்கு உள்ளாவது, வணிகத்திலும் அறம் பேணப்பட வேண்டும் போன்ற பல்வேறு சமூக சிக்கல்கள் அலசப்படுகின்றன. குடும்ப உறவுகள், பாச போராட்டங்கள், காதல் எனும் மெல்லிய உணர்வுகள் கதைகளில் இழையோடுகின்றன. சமூக சிக்கல்கள் நிகழும் போது தெளிவான முடிவுக்கு வர உதவும் நுால்.
–
புலவர் சு.மதியழகன்