இந்த புத்தக ஆசிரியர் வெளிநாடுகளில் மின்துறையில் பணியாற்றியவர். வரலாறு மீது கொண்ட ஆர்வத்தால், முதுமையில் வரலாறு படித்து பட்டம் பெற்றார். அதை ஏட்டுப் படிப்பாகக்கொள்ளாமல், தமிழகத்துடன் தொடர்பு கொண்டுள்ள நாடுகளின் வரலாறை மக்களுக்கு தெரியப்படுத்தும் ஆர்வத்தில் கம்போடியாவை கையில் எடுத்துள்ளார்.
காம்போஜம் என வரலாற்றிலோ, நாவலிலோ படித்திருப்போம். அது தான் கம்போடியாவா என்று, நுாலைப் படித்த பின் விடை கிடைக்கிறது.
காஞ்சிபுரத்தில் சில கோவில்களை கம்போடியர்கள் கட்ட உதவியதும், சிதம்பரம் கோவிலுக்கு நன்கொடை வழங்கிய தகவல்களும் ஆச்சரியப்பட வைக்கின்றன.
கம்போடியாவுடன் தமிழர்களுக்குள்ள வணிகத் தொடர்பு, கடல் வழியில் பயணித்த போது, சீதோஷ்ண நிலையை அறிய ஆமைகள், பறவைகளின் போக்கைத் தெரிந்து அதற்கேற்ப நடந்து கொண்டது போன்ற ருசிகரமான தகவல்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன.
கம்போடியாவில் கணபதி வழிபாடு பற்றிய தகவல், அங்கே சந்தனகிரி என்ற தமிழ்ப்பெயரில் கோவில் இருப்பது, ஓரிடத்தில் 1,000 சிவலிங்கங்கள் இருப்பது போன்ற செய்திகள் ஆவலைத் துாண்டுகின்றன.
கம்போடிய மன்னர்கள் ஒழுக்கசீலர்களாக இருந்தனர். மதுவை வெறுத்தனர் என்ற செய்தி, தமிழகத்தில் முன்பு வாழ்ந்த மக்களைப் போல் திகழ்ந்தனர் என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
கடலில் செல்லும் கலங்கள் எத்தனை வகை, அவற்றின் பெயர், அமைப்பு, அந்த கலத்திலே நீதிமன்றங்கள் செயல்பட்டதும் அருமையிலும் அருமை.
அங்கோர்வாட் கோவில் பற்றியவிபரங்கள் ஆன்மிக அன்பர்களுக்கு விருந்தாக அமையும். பழம்பெருமைமிக்க கம்போடியா பற்றிய ஒட்டுமொத்த தகவல்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
அத்தனை செய்திகளுக்கும் பொருத்தமான படங்கள் அருமையிலும் அருமை. வரலாற்று ஆர்வலர்களுக்கும், மாணவர்களுக்கும் பயனுள்ள நுால்.
– தி.செல்லப்பா