கி.மு., – கி.பி., என்பது போல, காசி புதுப்பிக்கப்படும் முன், புதுப்பிக்கப்பட்ட பின் என்று வகைப்படுத்தலாம். நெருக்கடியான சந்துகளில் வளைந்து நெளிந்து குப்பை கூளத்தை மிதித்தபடி சுகாதாரமற்ற இடிபாடுகளுடன் காணப்பட்ட பழைய காசி விஸ்வநாதர் கோவில் இப்போது அறவே இல்லை.
பிரமாண்டமாக, நவீனமாக, விஸ்தீரணமாக, வெகு சுத்தமாக, இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப புதுமைகளை கொண்டு காசி கம்பீரமாக எழுந்து நிற்கிறது. ஆனால், துளியும் அதன் பராம்பரிய பழம் பெருமையை குறைக்கவில்லை. அதுவே எல்.முருகராஜ் கைவண்ணத்தில் புத்தகமாகியுள்ளது.
பழைய காசியையும், புதிய காசியையும் பல முறை புத்தக ஆசிரியர் பார்த்தவர் என்பதால், சிறப்புகளை ஒப்பீடு செய்து எழுதுவது இலகுவாகியிருக்கிறது. புத்தகத்தை எழுதிய எல்.முருகராஜ் ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞர் என்பதால், ஒவ்வொரு படமும் கட்டுரைக்கு வலு சேர்ப்பதுடன், நேரில் பார்ப்பது போன்ற உணர்வையும் தருகிறது.
காலை நேரத்து கங்கா ஆரத்தி, தேவ் தீபாவளி பண்டிகை போன்றவை பலமுறை காசி பயணம் சென்றவர்களுக்கே தெரியாத புதிய விஷயங்களாகும். ஹிந்துவாக இருப்பவர்கள் ஒவ்வொருவரும் காசியை தரிசிக்க வேண்டும் என்று காஞ்சிப் பெரியவர் சொன்ன அருளுரையுடன் துவங்கும் இந்தப் புத்தகம், கீழே வைக்கவிடாத அளவிற்கு சுவாரசியமாக எளிமையாக இருக்கிறது. இதயத்தை தொடும் விதமாக இனிமையாகச் செல்கிறது.
தமிழகம் – காசிக்கு உள்ள தொடர்பு குறித்து இப்போது நிறைய பேசப்படுகிறது. காசிக்கு மக்கள் செல்லத் துவங்கியுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் காசி பற்றி தெரிந்து கொள்ளவும், நேரில் பார்த்து புரிந்து கொள்ளவும் விரும்புபவர்களுக்கு எளிய வழிகாட்டி நுால்.
– ராஜேஷ்