உலகமயமாதல், பெரு நிறுவன ஆதிக்கம், எல்லையற்ற நுகர்வு போன்றவை அழிவு மனநிலையை உண்டாக்குவதை சுட்டிக்காட்டி எழுதப்பட்டுள்ள நெடுங்கவிதை நுால். உலகை அச்சுறுத்தும் காலநிலை மாற்றம், புவி வெப்ப உயர்வால் ஏற்படும் பாதிப்புகளை பேசுகிறது.
இவற்றிலிருந்து காத்துக்கொள்ள உள்ள வாய்ப்புகளையும் சுட்டிக்காட்டுகிறார் கவிஞர்.
நிலம், நீர், தீ, வளி, வெளி என, தொகுப்பு பகுக்கப்பட்டுள்ளது. நிலம் பற்றி, ‘ஆதியிலே ஒரு மேகம் இருந்தது’ என துவங்குகிறது. அறிவியல் அடிப்படையில் தகவல்களை உள்ளடக்கி, பூமியின் சுழற்சி புனையப்பட்டுள்ளது.
இதை, ‘மண்ணுக்கு மணல் மூலம்; மணலுக்கு கல் மூலம்; கல்லே உயிர் மூலம்’ -என வனப்பாக அறிமுகம் செய்து, ‘பூமிக்குப் பிடித்த குணம் மாறிக் கொண்டே இருக்கிறது’ என்கிறார் கவிஞர். பூமியின் அழிவுகளை காலவரிசைப்படி தந்து, ‘முக்கால் பாகம் நீர் கொண்ட கோளமான பூமிக்கு, ‘நீரகம்’ என்ற பெயர் சூட்டினால் தானே பொருத்தமாக இருந்திருக்கும்’ என்று புனைந்துள்ளார்.-
அடுத்து நீர், ‘ஜடப்பொருளும் திடப்பொருளுமாகிய பூமியை உயிர்ப்பொருளும் பருப்பொருளுமாய் செய்தது தீரா மழையென்ற திரவப் பொருள் தான்’ என அறிமுகம் செய்துள்ளார். நீருக்கும், மனிதனுக்குமான உறவு அடிக்கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.
உயிரினங்களுக்கு இன்றியமையாத தண்ணீர் மாசுபடும் விதத்தை பட்டியலிட்டு, ‘ஒவ்வொரு நீர்நிலையும் ஒரு தண்ணீர் கோவில்’ என்று குறிப்பிடுகிறார்.
நெருப்பை, ‘ஐம்பூதங்களில் ஒன்றான தீ நாற்பூதங்களுக்கும் நாயகன்’ என்று குறிப்பிடுகிறார். சூரியனுக்கும் மரணம் என்ற அறிவியல் உண்மை கலக்கத்துடன் பதிவாகியுள்ளது. காற்றோடு கற்பனை உரையாடலாக உள்ளது வளி என்ற பகுதி. காற்றின் பிறப்பை, ‘எரிமலை பூமியின் முதல் புரட்சி வெடித்த எரிமலைக் குழம்புகளோடு வெந்து வெளியேறினேன்; அதன் வாய்வழி வந்த வாயுவடிவம் தான் இன்றும் பூமியில் இருக்கிறேன்’ என அமைத்துள்ளார்.
இறுதியாக, வெளி குறித்த பகுதியில் சூரியக் குடும்ப கோள்கள் பற்றி விரிவாக தரப்பட்டுள்ளது. ஐம்பூதங்களும் வாழ்வில் பரவிஇருப்பதை பறைசாற்றும் நுால்.
– ராஜ்கண்ணன்