கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.
பண்புடன் நடந்து கொள்பவருடன் அனைவரும் பழக விரும்புவர். பண்பின்றி நடந்து கொள்பவருடன் எவரும் பழக விரும்புவதில்லை. வியாபாரத்தில் அல்லது தொழில் வாழ்வில் வெற்றி பெறுவதற்கு பிறரது ஒத்துழைப்பும் ஆதரவும் அவசியமானதாக உள்ளன. பண்புடன் நடந்து கொள்வதால் பிறருடன் எளிதில் நல்ல உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முடிகிறது. அவர்களது ஒத்துழைப்பையும் ஆதரவையும் பெற முடிகிறது. மேலும் அது முரண்பாடுகளைத் தவிர்த்துவிட உதவுகிறது. பண்புள்ள நடத்தையைப் பணம் கொடுத்து வாங்க முடியாது. நாம் அதைக் கற்றுக்கொள்ளவேண்டும். பண்புள்ள நடத்தை உறுதியான வியாபார நடத்தைக்குப் பொருத்தமற்றது என நினைக்கக்கூடாது. பண்புடன் நடந்து கொள்ளும்போதே பணிவுடன் உறுதியை வெளிப்படுத்த முடியும். மற்றவர் மீது மரியாதையும் அன்பும் காட்டும் ஒவ்வொரு தடவையும் அவரது நன்மதிப்பு அளவை அதிகரித்துக் கொள்வதற்கு ஒவ்வொரு நாளிலும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு, வாடிக்கையாளர்களை மதிப்புக் கொடுத்து மரியாதையுடன் நடத்தப் பயிற்சி அளிக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு பணியாளர்களே நிறுவனமாகக் காட்சி அளிக்கின்றனர். அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அளித்து நடத்தும்போது நிறுவனமே தங்களைக் கவுரவிப்பதாக நினைக்கின்றனர்.