முகப்பு » கட்டுரைகள் » பார்த்தது கேட்டது

பார்த்தது கேட்டது படித்தது! (பாகம் – 17)

விலைரூ.320

ஆசிரியர் : அந்துமணி

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
நல்ல நகைச்சுவை அது, எந்த நாட்டுக்கு சொந்தமாக இருந்தாலும், அதை தேடிப் பிடித்து படித்து, பின், அதை தன் பாணியில் வாசகர்களுக்கு தருவதில் அந்துமணிக்கு நிகர் அந்துமணி தான்.

காரணம், அவரே ஒரு நடமாடும் நகைச்சுவை பல்கலைக்கழகம் என்பதால்!

நீண்ட இடைவெளிக்கு பின் வந்துள்ள அவரது, ‘பார்த்தது கேட்டது படித்தது பாகம் – 17’ புத்தகம் நல்லதொரு நகைச்சுவை விருந்தாக வந்துள்ளது.

கஞ்சத்தனத்திற்கு பெயர் பெற்ற ஸ்காட்லாந்து நாட்டினர் பற்றிய ஜோக்குகள் செம சிரிப்பை ஏற்படுத்துகின்றன.

‘செருப்பு திருடியதை ஒப்புக் கொள்கிறாயா?’ என்று கேட்டார் நீதிபதி.

‘நான் திருடவில்லை ஐயா... இந்த செருப்பை ஸ்காட்லாந்துகாரர் ஒருவர் அன்பளிப்பாக தந்தார்...’ என்றான் குற்றவாளி.

‘நீ திருடியதைக் கூட மன்னிக்க தயாராக இருக்கிறேன்; ஆனால், ஸ்காட்லாந்துகாரர், ‘அன்பளிப்பாக’ தந்தார் என்று பொய் சொன்னாய் பார்... அதை மன்னிக்கவே முடியாது...’ என்றாராம் நீதிபதி.

அந்த அளவிற்கு புகழ் பெற்றது ஸ்காட்லாந்துகாரர்களின், ‘தயாள’ உள்ளம் என்பதை, இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.

நீண்ட காலம் தம்பியை பிரிந்து சென்ற அண்ணன், மீண்டும் தம்பியை காண வந்தார். பாசப்பெருக்கில் இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டனர்.

பின், தம்பியைப் பார்த்து அண்ணன் கேட்டார்... ‘ஏன் இவ்வளவு தாடியுடன் இருக்கிறாய்? என் பிரிவு உனக்குள் அவ்வளவு சோகத்தை ஏற்படுத்திவிட்டதா?’ என்று!

அதற்கு அந்த தம்பி, ‘அப்படியெல்லாம் இல்லை அண்ணா... நீங்கள் போகும்போது, நம் இருவருக்கும் பொதுவான ஷேவிங் ரேசரை துாக்கிச் சென்று விட்டீர்கள்...’ என்றானாம்!

இரண்டு ஸ்காட்லாந்து ஆசாமிகள் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தனர்.

ேஹாட்டல் சிப்பந்தி ஓடோடி வந்து, ‘ஐயா... உங்கள் குடையை டேபிளிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டீர்கள்...’ என்று சொல்லி ஒரு குடையை கொடுத்தார்.

அதை வாங்கிக் கொண்டவர், ஹோட்டல் சிப்பந்திக்கு நன்றி சொல்லி, ஒரு ரூபாய், ‘டிப்ஸ்’ கொடுத்தார்.

இதை பார்த்துக் கொண்டிருந்த அவரது நண்பர், ‘நீ ஒரு ரூபாயெல்லாம், ‘டிப்ஸ்’ தர மாட்டாயே? இன்று உனக்கு என்னாச்சு?’ என்று கேட்டார்.

‘ஒருத்தன் ஒரு குடையை சும்மா கொண்டு வந்து வச்சுக்க என்று சொல்லி கொடுத்துவிட்டு போகிறான்; அவனுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காவிட்டால் எப்படி?’ என்று பதில் தந்தாராம்!

அடுத்து ஸ்காட்லாந்து விஷயமல்ல; நம்மூர் விஷயம்.

ஓர் எழுத்தாளர் மாணவப் பருவத்தில் இருந்த போது எழுதிய கட்டுரையைப் படித்த வகுப்பாசிரியர், ‘எதற்கு இந்த கட்டுரையில் இவ்வளவு குடிசை தொழில்கள்?’ என்று கேட்டாராம்.

மாணவர் புரியாமல் விழித்திருக்கிறார்.

‘சரடு விடுதல், கயிறு திரித்தல், கூடை முடைதல் போன்றவற்றை எல்லாம் கட்டுரையில் காட்டக்கூடாது; அதெல்லாம் குடிசை தொழில்கள்...’ என்றாராம் அந்த ஆசிரியர்!

நீண்ட ஆண்டுகளுக்கு பின், அந்த மாணவரை அதே ஆசிரியர் சந்தித்தாராம்...

‘என்னப்பா செய்கிறாய் இப்போது?’ என்று கேட்டிருக்கிறார்.

‘எழுத்தாளராக இருக்கிறேன்...’ என்று நண்பர் பதில் தந்திருக்கிறார்.

‘இப்போதும் அதே, ‘குடிசை தொழில் தானா?’ என்று கேட்டு ஆசிரியர் சிரித்தாராம்!

இப்படி புத்தகம் முழுதும் நகைச்சுவையான விஷயங்களை அள்ளி தெளித்துள்ளார்.

அதே நேரம் இவரளவு புத்தக வாசிப்பை நேசிப்பவர் யாரும் இருப்பரா என்று சந்தேகம் கொள்ளுமளவு நிறைய புத்தகங்கள் படித்துள்ளார்.

ரயில் பயணத்தின் போது புத்தகங்கள் படிக்கிறாரா அல்லது புத்தகங்கள் படிப்பதற்காகவே ரயில் பயணங்கள் மேற்கொள்கிறாரா என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு, இந்த புத்தகத்தில் அவர் நிறைய பயணம் செய்கிறார், நிறைய படிக்கிறார். தான் படித்ததை ரத்தினச் சுருக்கமாக சுவாரசியமாக நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியின், ‘நெஞ்சுக்கு நீதி’யும் அப்படி அவர் படித்த புத்தகம்!

அதில் இருந்து உருக்கமான பகுதி இது:

என் மனைவி பத்மாவதியின் உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது; டாக்டர்கள் வீட்டிற்கு கொண்டு போய்விடுங்கள்; இருந்து பயனில்லை என்று சொல்லிவிட்டனர்.

சென்னைக்கோ, திருச்சிக்கோ அழைத்துச் சென்று வைத்தியம் பார்க்க வசதியில்லாத நிலையில், அவளை வீட்டிற்கு அழைத்து வந்தேன்.

தவிர்க்க இயலாத சூழ்நிலையில, புதுக்கோட்டை பொதுக் கூட்டத்திற்கு போய்விட்டு இரவோடு இரவாக லாரியைப் பிடித்து வீட்டிற்கு வந்தால், அதற்குள் பத்மாவதி போய்விட்டாள்.

அருகே சென்றேன், என் கண்ணீர் துளிகள் அவளின் சலனமற்ற முகத்தில் விழுந்து உருண்டன. மெதுவாக குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டேன்.

அவளுக்கு தர அது ஒன்று தான், அப்போது என்னிடமிருந்தது.

– படித்த எனக்கு நெஞ்சம் கனத்தது.

நெஞ்சுக்கு நீதியை இவர் படித்தது போல, உடன்பிறப்புகள் கூட இந்தளவிற்கு ஆழமாக படித்திருப்பரா என்பது சந்தேகமே!

அந்துமணியின் நட்பு வட்டம் கடலளவு பெரியது மட்டுமல்ல; கடல் தாண்டியும் விரிந்துள்ளது.

அப்படி கடல் தாண்டி வந்த நண்பர் ஒருவர், நம்மூர் நகைக்கடைக்கு சென்று நகை வாங்கியிருக்கிறார். கடைசியில், ‘பில்’ வந்த போது, சேதாரம் (வீணான தங்கம்) என்று குறிப்பிட்டு ஒரு பெரிய தொகை எழுதியிருந்தனர்.

நண்பர் அதைப் பார்த்து விட்டு, ‘இந்த நகை செய்யும் போது, இவ்வளவு சேதாரமாகிவிட்டதா... பரவாயில்லை, சேதாரமான அந்த நகையை தனியாக தந்து விடுகிறீர்களா?’ என்று கேட்டுள்ளார்.

கடைக்காரர் இதை எதிர்பார்க்கவில்லை. ‘அது பழக்கமில்லையே...’ என்று இழுத்திருக்கிறார். ‘அப்படியானால் எனக்கு இப்படி வாங்கி பழக்கமில்லை...’ என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.

இன்றைக்கும் இந்தோனேஷியாவில் சேதார தங்கத்தை தனியே கட்டி வைத்துவிடுவர்; நமக்கு அது தேவை இல்லையெனில் பில் தொகையில் கழித்துக் கொள்வர்.

பல்வேறு மேலை நாடுகளில் தங்கம் விற்பதற்கும், நம்மூரில் தங்கம் விற்பதற்கும் உள்ள விஷயங்களை இப்படி அடுக்கிவிட்டு, ஏழை எளியவர்களின் சிறு முதலீடே தங்கம் தான்; அதில் கை வைக்கலாமா? என்று கவலையுடன் கேட்கிறார்.

தன் தகவலுக்கு தகுந்த போட்டோக்களை தருவதும், அந்துமணியின் ஸ்பெஷாலிட்டியாகும். இந்த இதழில், ஒரு போட்டோகிராபர் பற்றிய அருமையான குறிப்பு ஒன்றை கொடுத்துள்ளார்.

கிரிகோரி ஸ்டாக் என்ற அந்த வெள்ளைக்கார போட்டோகிராபர், உலகம் முழுதும் சுற்றி எடுத்த படங்களை வைத்து கண்காட்சி நடத்தி வருபவர். அவர், குஜராத் மாநிலம் கிர் வனப்பகுதியில் படம் எடுக்கும் போது, ‘சீதி’ என்ற ஆதிவாசியின மக்களை சந்தித்திருக்கிறார்.

அவர்களைப் பற்றிய விபரம் அறியப் போய், அது எங்கெங்கோ இழுத்துச் செல்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியில் மக்கள் எப்படி எல்லாம் அடிமைப்படுத்தப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டு இருக்கின்றனர் என்ற நீண்ட நெடிய சோகம், அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய கண்ணீர் கதையாகும்.

அதே போல குடிப் பழக்கத்தால் நேரிடும் கேடு குறித்து, எப்போதுமே அழுத்தம் திருத்தமாக சொல்லக்கூடியவர் இதைப் படித்துவிட்டு, ஒருவர் குடிப்பழக்கத்தை விட்டால் கூட, அது என் எழுத்துக்கு கிடைத்த வெற்றியாகும் என்பவர், இந்த புத்தகத்தில் குடியின் கேடு குறித்து, பல இடங்களில் குறிப்பிட்டு இருந்தாலும், 31ம் பக்கத்தில் விவரித்துள்ள ஒரு உண்மைச் சம்பவம் நம்மை உலுக்கி எடுத்து, உள்ளம் பதற வைக்கிறது.

ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும் என்றால், அந்த விஷயத்திற்கு முன் பின்னாக பக்கம் பக்கமாக எழுதிய புத்தகத்தை, ‘தலையணையாக்குவதில்’ எல்லாம் இவருக்கு உடன்பாடில்லை!

இன்றைக்கு பிரபலமாகியிருக்கும் செய்திகள் சில வரிகளில், 60 வினாடியில் 60 செய்திகள், செய்தித் துளிகள், விரைவுச் செய்திகள் என்ற அனைத்திற்குமே இவரே வழிகாட்டி என்பதை, 2006களிலேயே இவர் கையாண்ட உத்தியை, இந்த புத்தகத்தைப் பார்த்து, படித்து தெரிந்து கொள்வதன் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

சென்னை என்ன விலைக்கு விற்கப்பட்டது?

சிதம்பரம் நடராஜர் கோவில் கூரையில் வேயப்பட்ட, 21 ஆயிரம் பொன் ஓடுகளும், 72 ஆயிரம் பொன் ஆணிகளும் சொல்வது என்ன?

நடையன்கள் என்றால் என்ன?

போலீஸ் மாங்காய் எங்கு கிடைக்கும்?

உலகம் முழுதும் கொடிகட்டி பறக்கும் ஹோண்டா பிறந்த கதை!

ஜீன்ஸ் பிறந்த கதை!

பந்திக்கு முந்து என்ற பழமொழியின் உண்மை வடிவம்!

ஜி.டி.நாயுடுவின் கதை!

யானைகளின் ராணி யார் தெரியுமா?என்பது போன்ற அறிந்திடாத பல செய்திகளை, சில வரிகளில் கிடுகிடுவென சொல்லிச் செல்கிறார்.

தண்ணீருக்காக நாம் படும்பாடு படாதபாடாக இருக்கிறது. ஆனால், ராஜஸ்தான் பாலைவனத்தில், ‘நேமி’ என்ற இடத்தில் உள்ள மக்கள் செய்து வரும் தண்ணீர் நிர்வாகத்தால், தாங்கள் வாழும் பாலை நிலத்தை சோலைவனமாக்கி வைத்துள்ளனர். இது அங்கே சாத்தியமாகும் போது, இங்கே சாத்தியமாகாதா? அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தான் பதில் சொல்ல வேண்டும்.

இவர்கள், புத்தகத்தை படித்தனர் என்றால் நிச்சயம் பதில் தருவர்; செயலிலும் இறங்குவர்!

– எல்.முருகராஜ்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us