முகப்பு » கேள்வி - பதில் » அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்! (பாகம் – 7)

விலைரூ.260

ஆசிரியர் : அந்துமணி

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: கேள்வி - பதில்

ISBN எண்:

Rating

பிடித்தவை
தீபாவளிக்கு புதுப்புது பட்டாசுகளும், பட்டாடைகளும், திரைப்படங்களும் தான் வெளியாகுமா... இதோ, அந்துமணியின் பதில்கள் – ௭ பாகமும், வாசகர்களை மகிழ்ச்சிக் கடலில் திளைக்க வைக்க வெளிவந்துள்ளது. தினமலர் – வாரமலர் வாசகர்களாக இருப்பவர்கள், வாழ்க்கையில் ஒரு முறையாவது அந்துமணியை சந்தித்துவிட வேண்டும் என்ற ஆவல் கொண்டவர்களாக இருப்பர்.

இப்போது தொடர்ந்து வெளிவந்து வெற்றி நடை போடும் அந்துமணியின் பா.கே.ப., பயண அனுபவங்கள் மற்றும் கேள்வி – பதில் தொகுப்பு புத்தகங்களை படிப்பவர்கள் பலரும், அந்துமணியை சந்திக்க அதிக ஆர்வம் கொuண்டுள்ளனர்.

இவர்களில் பலரும் அந்துமணிக்கு கடிதம்எழுதி, ‘எப்போது, எங்கு வந்தால் சந்திக்கலாம்’ என்று கேட்டு எழுதுவர்; பதில் வராது.

இந்நிலையில், திசையன்விளையைச் சேர்ந்த கலா என்ற வாசகி, ‘நான் உங்களைசந்திக்க வேண்டும்; என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டு எழுதுகிறார்.

‘ஓ... சந்திக்கலாமே...’ என்று பதில் தந்து விடுகிறார்; சந்திக்கும் கிழமையை கூட தெரிவித்து விடுகிறார்.

‘அட... அப்படியா! இதன் விபரம் தெரிந்தால் நாங்களும் சந்திப்போமே...’ என்ற உங்கள் ஆர்வத்திற்கான விடையை கடைசியில் சொல்கிறேன். அதற்கு முன், புதிதாக வந்துள்ள நம் அந்துமணியின் பதில்கள்– 7ம் பாகத்திற்குள் நம்மை நுழைத்துக் கொள்வோம்.

எழுபது ஆண்டுகளைத் தாண்டி, வெற்றி நடை போடும், ‘தினமலர்’ நாளிதழ் யார் சார்பாக செயல்படுகிறது? என்பதை அறிந்து கொள்வதில், ஸ்ரீரங்கம் வாசகி பத்மாவிற்கு அலாதி ஆர்வம்!

அவருக்கு பதில் தந்த அந்துமணி, ‘வாசகர்களாகிய உங்களைச் சார்ந்து தான் தினமலர் இப்போதும் இருக்கிறது; எப்போதும் இருக்கும்...’ என்கிறார்.

‘எதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்; எதை மறக்க வேண்டும்?’ என்று ராஜபாளையத்தில் இருந்து ராஜா என்பவர் கேட்ட கேள்விக்கு, ‘உங்களுக்கு பிறர் உதவியதை நினைக்க வேண்டும்; நீங்கள் பிறருக்கு உதவியதை மறக்க வேண்டும்!’ என்று இரண்டே வரியில் வாழ்க்கையின் மொத்த சாரம்சத்தையும் தாங்கியுள்ள அவரது பதில், நம்மை சிலிர்க்க வைக்கிறது.

இப்படி இரண்டே வரிகளில் தந்த தத்துவார்த்தமான பதில்கள் பல; அவற்றுள் சில:

● தன்னம்பிக்கை சற்று பயத்தை தந்தாலும் ஆபத்தில்லை; ஆனால், தலைக்கனம் ஆளையே தீர்த்துவிடும்!

● பொறாமை குணம் கொண்ட பெண்ணை விட, பொறுமை குணம் கொண்ட பெண்ணே எதிலும், எப்போதும் ஜெயிக்கிறார்; ஜெயிப்பார்!

● உங்களுக்கு தீங்கு செய்த எதிரி என்றாலும், வாய்ப்பு கிடைக்கும் போது, அவருக்கு நன்மை செய்து விடுங்கள்; மாறாக, பழி வாங்க வேண்டும் என்று நினைத்தால் மன நிம்மதி போய்விடும்!

● பிரச்னைகள் தாக்கும் போது உள்ளம் கலங்கக் கூடாது; மன அமைதியை இழந்து விடக்கூடாது. அப்போது தான் பிரச்னைகளிலிருந்து மீண்டு, சாதிக்க முடியும்!

● நீட் தேர்வை வைத்து தான் இன்றைக்கு தமிழகத்தில் அரசியலே நடக்கிறது. இந்நிலையில், ‘நீட் தேர்வுக்கு பயந்து, தற்கொலை செய்து கொள்வோருக்கு இழப்பீடு வழங்குவதில், தங்களுக்கு உடன்பாடு உண்டா?’ என்ற கேள்விக்கு, ‘உடன்பாடு கிடையாது; இழப்பீடு மட்டுமின்றி, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என்பது தற்கொலைகளை அதிகரிக்கச் செய்யும்...’ என்று துணிச்சலாகவும், ஆணித்தரமாகவும் பதில் தருகிறார்.

ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., – ஐ.எப்.எஸ்., ஆகிய படிப்புகளில் வராத தற்கொலைகள், நீட் தேர்வில் மட்டும் வருவதற்கு இந்த இழப்பீடும் ஒரு காரணம் என்றும் சுட்டிக் காட்டுகிறார்.

அந்துமணி ஒருவர் தான், நீட் தேர்வில் இப்படி தைரியமான கருத்தை தொடர்ந்து முன் வைக்கிறார்; இதன் காரணமாக, வெட்டியாக பொங்கிய எதிர்க்கட்சிகள் மற்றும் உதிரிக்கட்சிகள் எல்லாம் இப்போது அடக்கி வாசிக்கின்றன.

‘அரசியல்வாதிகளால் ஏன் நடிகர்களாக முடிவதில்லை?’ என்ற கேள்விக்கு, ‘அவர்கள் தான் மக்கள் முன் நடித்துக் கொண்டிருக்கின்றனரே...’ என்று கிண்டலாக பதில் தருகிறார்.

இந்த கிண்டலும், கேலியும் இவருக்கே உண்டானது. இது போல இடம் பெற்றுள்ள பல பதில்கள், நம்மை அறியாமலேயே வாய் விட்டு சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கின்றன; புத்தகத்தை கடைசி வரை உயிரோட்டம் குறையாமல் கொண்டு செல்கிறது.

உதாரணத்திற்கு இன்னும் சில கேள்வி – பதில்கள்...

‘அரசியல்வாதிகள் ஏன் வேட்டி, சட்டை, செருப்பைக் கூட வெள்ளை நிறத்தில் அணிகின்றனர்?’ என்ற கேள்விக்கு, ‘அப்போது தான், ‘கருப்பு’ கைக்கு வரும் போலும்...’ என்கிறார்.

‘உண்மையான அரசியல்வாதி ஒருவரைப் பார்க்க விரும்புகிறேன் முடியுமா?’ என்ற திருச்சி குந்தலாவின் கேள்விக்கு, ‘முடியுமே!டில்லி ராஜ்காட்டிற்கு சென்றால் பார்க்கலாம்; அவர் பெயர் காந்தி; சமாதிக்குள் மீளாத் துயில் கொண்டுள்ளார்...’ என்று பதில் தருகிறார்.

‘அரசியல்வாதியாக விரும்புகிறீர்களா? ரொம்ப சிம்பிள், மனசாட்சியை மறந்து விடுங்கள்; காதுகளை அடைத்துக் கொள்ளுங்கள்; கண்களை மூடிக் கொள்ளுங்கள் விரைவில் அரசியல்வாதியாகி விடுவீர்!’

மதுக் கடைகளுக்கு ஏன் விடுமுறை தரப்படுவதில்லை தெரியுமா? அங்கு வரும் தமிழர்கள் யாவரும், ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ வகுப்பை தவறவிட்டு விடக்கூடாது என்பதற்காகவாம்!

‘வாழ்க்கையில் முன்னேற மனைவியை அடக்கி வாழ வேண்டுமா, அடங்கி வாழ வேண்டுமா?’ என்று கேட்ட தென்காசி ஜெயராமனுக்கு, ‘அடக்கவும் வேண்டாம்; அடங்கவும் வேண்டாம். ஐக்கியமாகிப் பார், வெற்றி தான் எப்போதும்...’ என்கிறார்.

இரு சக்கர வாகனம் ஓட்டுவோர், தலைக்கு அவசியம் கவசம் அணியுங்கள்;இல்லாவிட்டால், வீட்டில் திவசம் தான் என்று, ‘ஹெல்மெட்’ அணிவதற்கு ஆதரவாக நிற்கிறார்.

‘குட் மார்னிங், குட் ஆப்டர்நுான், குட் ஈவினிங், குட் நைட்’ என்று ஏன் வானத்தை எட்டி எட்டிப் பார்த்து, நேரத்திற்கு ஒரு சரியான வார்த்தை சொல்ல தடுமாறுகிறீர்கள்... அழகு தமிழில் எப்பொழுதிலும் வணக்கம் சொல்லலாமே என்று ஒரு பதிலில், ‘நச்’ என்று சொல்கிறார்.

‘ஆண்கள் துணையின்றி பெண்களால் சாதிக்க முடியாது என்கின்றனரே...’ என்ற அன்புச்செல்வியின் கேள்விக்கு, ‘இந்திரா காந்தி முதல், ஜெயலலிதா வரை சாதித்தது எல்லாம் எப்படியாம்?’ என்று எதிர்கேள்வி கேட்கிறார்.

சில வாசகர்கள் என் கேள்விகளை பரிசீலிப்பதே இல்லை என்று சொல்லும் போது, ‘ஒரு நாளைக்கு, 200 கேள்விகள் படிக்கிறேன்; அவற்றில், வாரத்திற்கு எட்டு கேள்விகளுக்கு மட்டுமே பதில் தர முடிகிறது. ஆகவே, என் நிலைமையை புரிந்து கொள்ளுங்கள்...’ என்கிறார். கேள்வி கேட்ட சென்னை வாசகர் மோஜ் மட்டுமல்ல; இவரைப் போன்ற மனநிலையில் உள்ள பல வாசகர்களுக்கும் இந்த பதில் பொருந்தி வரும் தானே!

புத்தகத் திருவிழாவில் அதிகம் விற்கப்பட்ட புத்தகங்களில், அந்துமணி எழுதிய புத்தகங்களும் உண்டு. புத்தகத் திருவிழாவிற்கு வந்திருந்த அன்றைய துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அந்துமணியின் புத்தகங்கள் விற்கப்பட்ட தாமரை பிரதர்ஸ் ஸ்டாலுக்கு வந்தவர், கைகொள்ளாத அளவிற்கு அந்துமணியின் புத்தகங்களை வாங்கிச் சென்றார். இது பற்றிய கேள்விக்கு, ‘தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கும் பாமரர் முதல், துணை முதல்வர் வரை என் புத்தகங்களை விரும்பி வாங்கிப் படிப்பது மகிழ்ச்சியைத் தருகிறது...’ என்கிறார் அடக்கமாக!

அந்துமணிக்கு பிடிக்காத விஷயங்கள் ஜாதகம், ராசி போன்றவை தான். இவரிடம், ‘சனிப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருந்தது?’ என்று கேட்டதற்கு, ‘வீண் குழப்பங்களும், கவலைகளும் தரும் இது போன்ற விஷயங்கள் பக்கம் போவதும் இல்லை; காது கொடுத்து கேட்பதும் இல்லை...’ என்கிறார்.

இதற்குப் பிறகும், தென்காசி வாசகி மோகினி இவரை விடுவதாகயில்லை; ‘அதிர்ஷ்டம் பற்றிய உங்கள் கருத்து என்ன?’ என்று கேட்கிறார். ‘அது சோம்பேறிகளின் விருப்பமும், எண்ணமும் ஆகும். இரும்பு இதயம் கொண்டோர், அதிர்ஷ்டம் என்ற வார்த்தையை நினைத்துக் கூடப் பார்ப்பது இல்லை...’ என்கிறார் திடமாக!

அந்துமணியிடம் நெருங்கிப் பழகியவர்களுக்கு மட்டுமல்ல; சாதாரணமாக பழகுபவர்களுக்கு கூட செய்தி, படங்கள் தொடர்பாக எழும் கேள்வி மற்றும் சந்தேகங்களுக்கு, அவர் தரும் எளிமையான விளக்கங்கள் பசுமரத்தாணி போல பதியும் அந்தளவிற்கு நிறுத்தி நிதானமாக கற்றுக் கொடுப்பார்.

அப்படிப்பட்ட அந்துமணி, அனைத்து பதிப்பின் ஆசிரியராக இருந்த அமரர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தியிடம் கற்றுக் கொண்ட விஷயங்களை நெகிழ்ச்சியுடன் இப்புத்தகத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அது:

வாசகர்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டும்; அவர்களுக்கு உதவும் செய்திகள் வெளியிட வேண்டும்; எந்த கட்சியையும் சார்ந்திருக்கக் கூடாது. யாருடனும் கோபப்படாமை, அமைதி, புன்சிரிப்பு, நேர்மை ஆகியவற்றை கற்றுக்கொண்டேன் என்று சொல்லி, இங்கே நான் சொல்லியுள்ளது குறைவே என்றும் கூறுகிறார்.

கட்டுரையை முடிப்பதற்கு முன், அந்துமணியை எங்கே, எப்போது, எப்படி சந்திக்கலாம் என்று அவரே சொன்னதாக சொன்னீர்களே... அந்த அரிய தகவலைச் சொல்லுங்கள் என்ற உங்கள், ‘மைண்ட் வாய்ஸ்’ கேட்கிறது. இதோ அதற்கு அவரே தந்த பதில்...

‘ஒவ்வொரு ஞாயிறும் நாம் சந்தித்துக் கொண்டு தானே இருக்கிறோம்; ஒவ்வொரு ஞாயிறும், ‘வாரமலர்’ வாங்குங்கள்; நம் சந்திப்பு தொடரும்!’

இதைவிட எளிய இலகுவான வழி வேறு கிடையாது. ஆகவே, அந்துமணியைச் சந்திக்க விரும்புவோர் புதியவர் என்றால், ‘வாரமலர்’ வாங்கி சந்திப்பை துவக்குங்கள். பழையவர் என்றால், ‘வாரமலர்’ வாங்குவதை தொடருங்கள்.

நன்றி, வாழ்த்துகள்!

– எல்.முருகராஜ்

கட்டுரைக்கு நடுவே, ‘புல் அவுட்’ போடுவதற்கு பயன்படுத்திக் கொள்ளவும்

–––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––

* உங்களுக்கு பிறர் உதவியதை நினைக்க வேண்டும்; நீங்கள் பிறருக்கு உதவியதை மறக்க வேண்டும்!

* தன்னம்பிக்கை சற்று பயத்தை தந்தாலும் ஆபத்தில்லை; ஆனால், தலைக்கனம் ஆளையே தீர்த்துவிடும்!

* பொறாமை குணம் கொண்ட பெண்ணை விட, பொறுமை குணம் கொண்ட பெண்ணே எதிலும் எப்போதும் ஜெயிக்கிறார், ஜெயிப்பார்!

* ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., – ஐ.எப்.எஸ்., ஆகிய படிப்புகளில் வராத தற்கொலைகள், ‘நீட்’ தேர்வில் மட்டும் வருவதற்கு இந்த இழப்பீடும் ஒரு காரணம்!

* மனைவியை அடக்கவும் வேண்டாம்; அவரிடம் அடங்கவும் வேண்டாம்; ஐக்கியமாகிப் பார், வெற்றி தான்!

* கேள்விக்கு, தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கும் பாமரர் முதல், துணை முதல்வர் வரை என் புத்தகங்களை விரும்பி வாங்கிப் படிப்பது மகிழ்ச்சியைத் தருகிறது!

* அதிர்ஷ்டம் என்பது சோம்பேறிகளின் விருப்பமும், எண்ணமும் ஆகும். இரும்பு இதயம் கொண்டோர் அதிர்ஷ்டம் என்ற வார்த்தையை நினைத்துக்கூட பார்ப்பது இல்லை!

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us