முகப்பு » கவிதைகள் » சிகரங்களில் உறைகிறது காலம்

சிகரங்களில் உறைகிறது காலம்

விலைரூ.100.00

ஆசிரியர் : கனிமொழி

வெளியீடு: வ.உ.சி நூலகம்

பகுதி: கவிதைகள்

Rating

பிடித்தவை
வ.உ.சி., நூலகம், ஜி1, லாயிட்ஸ் காலனி, அவ்வை சண்முகம் சாலை, ராயப்பேட்டை, சென்னை600 014. (பக்கம்: 96).
கவிஞர் கனிமொழி,
"கருவறை வாசனை என்ற கவிதை நூல் வாயிலாக ஏற்கனவே நன்கு அறிமுகமானவர். கவிதை மொழியை நேசிக்கும் அவரது சுபாவம், இந்தக் கவிதைத் தொகுப்பிலும் நன்கு வெளிப்பட்டிருக்கிறது. இந்தத் தொகுப்பில் சந்துருவின் ஓவியமும் புத்தகத்தின் கட்டமைப்பும் கூடுதல் சிறப்பம்சங்கள்.
கவிஞர் ஞானக்கூத்தனின் வாழ்த்துரையைப் படித்து முடித்தபோதே, வாசகனின் மனம் கவிதைச் சோலையில் நடை பயில தயாராகி விடுகிறது. "நடிகர்கள், அரசியல்வாதிகள், சமயச் சான்றோர்கள் பூதகரமான கட்அவுட்களாய் வழி எங்கும் பயமுறுத்துகின்றனர் என்ற கவிதை வரிகளில் கசகசத்த நகரத்தின் வீதிகள் நம் கண் முன் படமாய் விரிகின்றன.
"காதலும் காமமும் தொடாத சிகரங்களில் உறைகிறது காலம் என்ற அவரது கற்பனை வரிகளில் சற்றே நிதானித்து விட்டு, கவிதையின் மீது தொடர்ந்து பார்வையை பரவ விட்டால், சிந்தனைக்குள் ஒரு குட்டி சுனாமி பிரவாகமாய் பொங்கி வடிகிறதை உணர முடிகிறது.
காலச்சுவடு, கல்கி ஆகிய இதழ்களில் இடம் பெற்ற கவிதைகள் சில இத்தொகுப்பில் உள்ளன. எந்த இதழிலும் இடம் பெறாத கவிதைகளும் இருக்கின்றன. குறிப்பாக, "உறவறுத்துப் போக என்ற கவிதையைப் படிக்கும்போது ஒரு வேதாந்தியின் மனநிலையோடு எழுதப்பட்டது போல தெரிகின்றது.
காலச்சுவடின் இதழ் ஏற்கும் கவிதை மொழியும், "கல்கி அங்கீகரிக்கும் கவிதை நடையும் வெவ்வேறானது என்பது வாசகர்களின் கருத்து. அதேபோல, புலம்பலே புதுக்கவிதையின் மைய இதழ் என்றும் ஒரு கருத்து பரவலாக, கவிதை வாசிப்பவர்களிடையே காணப்படுகிறது. கனிமொழியின் கவிதையாற்றும் திறன், காலச்சுவடு, கல்கி வாசகர்களையும் தனது வட்டத்திற்குள் கொண்டு வந்து விடுகிறது.
மேலும், "உறவறுத்துப் போக என்ற கவிதை மூலம் புலம்பலின்றி ஒரு "சலிப்பை நம்பிக்கையூட்டும் கவிதையாக ஆக்கவும் முடியும் என்பதை நிரூபிக்கவும் செய்திருக்கிறார். அப்பாவைப் புகழும்போது, "தென்றலை விட மென்மையாய், புயலை விட வேகமாய் விழும் உன் வார்த்தைகள் எத்தனை மௌனங்களைக் கலைத்திருக்கின்றன? என்று "புன்னகைக்குப் பின்னால் என்ற கவிதையில் குறிப்பிடுகிறார் கனிமொழி. கவிதைகளில் வார்த்தைகள் கை கோர்த்துக் கொண்டு களிநடம் புரிவதால், வாசிக்கும்போது, வாசகனின் ரசனை உணர்வுகூட மேம்படுகிறது.
இசை நிகழ்ச்சி முடிந்ததும் எழுந்து போகாத ரசிகன் மாதிரி கனிமொழியின் கவிதைகளைப் படித்து முடித்ததும் ஓர் உணர்வு ஏற்பட்டது என ஞானக் கூத்தன் குறிப்பிட்டதை விட வேறு ஏதேனும் சொல்லிப் பாராட்ட முடியுமா?

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us