முகப்பு » தமிழ்மொழி » பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும்

பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும்

விலைரூ.600

ஆசிரியர் : டாக்டர் உ.வே.சாமிநாதையர்

வெளியீடு: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம்

பகுதி: தமிழ்மொழி

ISBN எண்:

Rating

பிடித்தவை
சங்க இலக்கியங்கள், பண்டைய தமிழர் வாழ்வின் வரலாற்று ஆவணங்கள்; அன்றைய அக, புற வாழ்க்கை முறைமையைக் காட்டும் காலக்கண்ணாடி. 2000 ஆண்டுகளுக்கு முன், இயற்றப்பட்ட சங்கப்பாக்களில், முதன்மை நிலையில் வைத்துப் போற்றப்படும் நுால் பத்துப்பாட்டு.
இதன் மூல பிரதிகளை தேடிக்கண்டுபிடித்து, நச்சினார்க்கினியர் எழுதிய உரையுடன் பதிப்பித்தவர் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர்.
‘பத்துப்பாட்டு மூலமும் மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியருரையும்’ என்ற தலைப்புடன், ‘டாக்டர் உ.வே.சாமிநாதையர் பரிசோதித்து எழுதிய பலவகை ஆராய்ச்சிக் குறிப்புகளுடன்’ என்று, 1889ல் பதிப்பித்தார். இப்போது வரலாற்று சிறப்பு மிக்க, எட்டாம் பதிப்பாக வெளிவந்துள்ளது இந்நுால்.
பத்துப்பாட்டில் அடங்கிய திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு,
பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியவற்றுடன், முதல் மூன்று பதிப்புகளில், உ.வே.சா., எழுதிய முகவுரைகளும் இடம்பெற்றுள்ளன.
மலைபடுகடாம் உரையில், நச்சினார்க்கினியர் தரும் விளக்கத்தில், பத்துப்பாட்டு நுால்களைத் தொகுத்தோர் சங்கப் புலவர்களே என்று அறிய முடிகிறது.
பத்துப்பாட்டு நுால்கள் தொகுக்கப்படாதிருந்தால், சங்ககால மன்னர்களின் வரலாறும், பண்டைய தமிழ் மக்களின் வாழ்க்கை முறைமையும் உலகம் அறிய முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.
இவற்றை பாடிய புலவர்கள் நத்தத்தனார், பெருங்கவுசிகனார், உருத்திரங்கண்ணனார், கபிலர், நப்பூதனார், நக்கீரர், மாங்குடி மருதனார், முடத்தாமக் கண்ணியார் ஆகியோராவர்.
பாடப்பட்டவர்கள், ஆரியவரசன் பிரகத்தன், ஓய்மானாட்டு நல்லியக்கோடன், குமரவேள், சோழன் கரிகாற்பெருவளத்தான், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், தொண்டைமான் இளந்திரையன், நன்னன். இவர்களின் வரலாறு விரிவாகத் தரப்பட்டுள்ளது.
முதற்குறிப்பகராதி, பதிப்பில் குறிப்பிடப்படும் நுால் பெயர்களை தெளிவாகப் புரிந்து கொள்ள வழிவகுக்கிறது. பிற்சேர்க்கையாகத் தரப்பட்டுள்ள அகராதி, செய்யுள்களில் வரும் பதங்களின் பொருள்களை புரிந்து கொள்ள உதவுகிறது.
பத்துப்பாட்டு நுாலை அச்சேற்ற உ.வே.சா., எடுத்த முயற்சி கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டியது. நச்சினார்க்கினியரின் உரையுடன், பாடல்களின் பல்வேறு படிகளைப் பொருத்திப் படித்த பின் தான் பதிப்பித்துள்ளார்.
கடந்த, 1888 முதலே, மூல பிரதிகளைத் திரட்டத் துவங்கியுள்ளார். அவரது அயராத முயற்சிகள் நெகிழ்த்துகின்றன. முதல் பதிப்புடன் நிறைவு அடைந்து விடாமல், மேலும் பிரதிகளை தேடியலைந்துள்ளது, அவரது ஊக்கம் மற்றும் விடாமுயற்சியை வெளிப்படுத்துகிறது.
நுாலை, உருவாக்கியது பற்றி, முகவுரைகளில் உ.வே.சா., விவரித்துள்ளார். அவரது தணியாத வேட்கையையும், பிரதிகளைத் தேடி அலைந்த கடும் உழைப்பும் இவற்றில் வெளிப்படுகிறது.  
இந்த நுாலை பதிப்பிக்கும் இமாலயப் பணிக்கு, திருப்பாதிரிப்புலியூர் சேஷையர் பொருளுதவி வழங்கியதை நன்றியுடன் உ.வே.சா., பதிவு செய்துள்ளார்.  
முதல் பதிப்பு அச்சில் வெளிவர பொருளுதவிய திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிகர், துணை ஆட்சியர் தில்லை நாயகம் பிள்ளை, வழக்கறிஞர் சீனிவாச பிள்ளை, மிராசு ரத்தினம் பிள்ளை, ஜமீன்தார் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரை நன்றியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் பதிப்பு வெளிவர உதவியவர்கள் தமிழ்ப் பண்டிதர்கள் இ.வை.அநந்தராமையர், ம.வே.துரைசாமி ஐயர், பொருளுதவி தந்த ராஜராஜேசுவர சேதுபதி மகாராஜா.
இவர்களுக்கும் நன்றி கூறி நெகிழ்ந்துள்ளார். மூன்றாம் பதிப்பு, 1931ல் வந்தது. அந்த பதிப்பில் செய்த மாற்றங்கள், அரிய சேர்ப்புகளை தனியாக குறிப்பிட்டுள்ளார்.
பதிப்பு வெளிவர பொருளுதவி செய்த வைத்தியலிங்க தேசிகர், சுவாமிநாத சுவாமிகள், ஷண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதி மகாராஜா, கொழும்பு ஸ்ரீகாந்த் முதலி, பெரும்பன்றியூர் பெரியசாமி முத்தையா மற்றும் அச்சிடுவதில் உதவியவர்களை நினைவுகூர்ந்துள்ளார்.
பத்துப்பாட்டு நுாலின், எட்டாம் பதிப்பு வெளிவர துணை நின்ற பெருமை, நாணயவியல் அறிஞரும், ‘தினமலர்’ நாளிதழ் பங்குதாரருமான, டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியை முழுமையாக சாரும்.
அவர் வழங்கிய நிதியுதவியால் தான், அழகிய கட்டமைப்புடன் உருவாகி, வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. தமிழரின் பொக்கிஷமாக உள்ள இந்த நுாலை, ஒவ்வொரு தமிழார்வலரும் படிக்க வேண்டும்.
மெய்ஞானி பிரபாகர்பாபு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us