புத்தா பப்ளிகேஷன்ஸ், சென்னை. (பக்கம்: 320)
முன்னுரை, மருது சகோதரர்களும் சிவகங்கைப் பாளையமும், மருது சகோதரர்களின் எழுச்சி, அவர்களின் மேலாண்மை எதிர்ப்போர், அவர்களின் வீழ்ச்சி, அவர்களின் ஆக்கப்பணிகள், அவர்களைப் பற்றிய இலக்கியங்கள், அவர்களின் குடிவழி என எட்டு கட்டுரைகளாக இந்த ஆய்வடங்கல் வெளியிடப்பட்டுள்ளது.
சின்ன மருது ஜூன் 16, 1801ல், வெளியிட்டுள்ள திருச்சி அறிக்கை, மருது சகோதரர்களின் நோக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. அக்கால கட்டத்தில் ஆங்கிலேயரி ன் ஆதிக்க எதிர்ப்பைக் காட்டிய மற்றவர்கள் இத்தகைய அறிக்கையை வெளியிடாதபோது சின்ன மருதுவின் துணிச்சல் நம்மை நெகிழ வைக்கிறது.
மருது சகோதரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதற்குக் காரணம் ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்ததும், சிவகங்கையின் உண்மைக் குடிவழியை நிலை நிறுத்த விரும்பியதேயாம் (பக். 302).
வீரத்தின் விளை நிலமாக விளங்கிய இச்சகோதரர்கள், பல அறப்பணிகளைச் செய்துள்ளனர். அரண்மனைகள், கோட்டைகள் பல அமைத்து நன்கு ஆட்சி செய்துள்ளனர். இதை ஆசிரி யை நன்கு விளக்கி உள்ளார்.
போராட்டம் வாழ்க்கையில் ஓர் அங்கம். ஆனால், இச்சகோதரர்களுக்கு போராட்டமே வாழ்க்கையாக அமைந்தது என்பதை வாசகர்கள் உணரும் வண்ணம் ஆசிரியை அழகுற விளக்கியுள்ளார். கருத்து வளமான நூலை, வெகு சுவாரஸ்யமாக எடுத்துச் செல்லும் திறமைக்கு படிப்பவர் பாராட்டாமல் இருக்க முடியாது.