முனைவர் ஏ.ஆர்.வெங்கடாஜலபதி, வெளியீடு: மார்க் பப்ளிகேஷன்ஸ், மும்பை. (விலை : ரூ. 2500)
தன்னகத்தில் கொண்டுள்ள புகைப்படங்களாலும் வண்ணச் சித்திரங்களாலும் பொலிவடைந் துள்ள இந்நூல் தொகுப்பில் சிறந்த கட்டுரை புஷ்பா அரபிந்தோவினதாகும். அசோக மித்திரனின் சென்னை 50களின் ஆரம்ப நாட்கள் பற்றியது மனதைத் தொடுகிறது. பிரபஞ்சனின் கட்டுரை யதார்த்தமானதாகவும் உண்மையான நிகழ்வுகளைக் கொண்டு படிக்கத் தூண்டுவன. சுந்தர ராமசாமி ஏமாற்றத்துடன் திரும்புவது அன்றைய சென்னை! ஸ்டீபன் ஹ்யூஸ் மதுரையிலிருந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கையிலேயே அவரது திறமையைக் கண்டிருக்கிறேன். ஆகையால் அவரது கட்டுரை சென்னை எவ்வாறு சினிமா உலகத்துடன் எல்லா விதங்களிலும் பிணைந்துள்ளது என்பதைக் காட்டுகையில் அவரது உழைப்பு வெளிப்படுகிறது. இந்திரனின் கலையார்வம் அவரது கட்டுரையில் தெரிகிறது. சோழமண்டலத்தின் பெருமையையும் வெளிக்கொணர்கிறது.
கவனத்தை ஈர்க்கும் கட்டுரை, "சென்னை நாட்கள்; புலப்படும் கனவுகள்' என்ற பிளேக் வெண்ட்வொர்த் என்பவருடையது. தமிழகத்தில் தமிழைக் கற்றுக் கொண்டு தமிழிலேயே பேச முயலும் (அவ்விதத்தில் ஸ்டீபன் ஹ்யூஸ், அவரது மனைவி சாரா இருவரும் சேர்க்கப்பட வேண்டியவர்கள்) வெளிநாட்டரின் அனுபவங்களை வெளிக்கொணர்வது மட்டுமின்றி தமிழ் மொழியைப் பற்றிய அவரது உணர்வும், அதைப் போற்றும் அவரது பண்பும் தெளிவாகின்றன. அவரது மதுரை, சென்னை மொழி அனுபவங்கள் ஆர்வத்தைத் தூண்டுகின்றன.
தொகுப்பாசிரியரின் கூற்றைப் போல, இந்த நூலின் பெருமை ராமு அரவிந்தனின் உயிருள்ள புகைப்படங்களும், இளங்கோவின் அசைவுகளை உணர்த்தும், உணரச்செய்யும் வண்ணச் சித்திரங்களுமேயாகும். ஆங்கிலத்தில் "காஃபி டேபிள் புக்' என்றழைக்கப்படும் வகையைச் சேர்ந்த இந்த நூல் அவ்வப்பொழுது பார்த்து ருசிக்க வேண்டிய புத்தகமாகும். எந்த பக்கத்தைப் பிரித்துப் பார்க்கினும் ஆச்சரியத்தை உண்டுபண்ணுவதாக உள்ளதால், இந்த நூலின் மதிப்பு அதன் விலையை மறக்கச் செய்கிறது!
தொகுப்பாசிரியரின் கட்டுரையில் சென்னை என்ற பெயருக்கு அவர் முக்கியத்துவம் அளிப்பதை வலியுறுத்துவது போலத் தோன்றுவதாலும் "மெட்ராஸ்' என்ற பெயரை மறுப்பது போலத் தோன்றும் தலைப்பினாலும், அவரது கட்டுரையில் அரசியல் வாடை வீசுவது போலத் தோன்றுவதாலும், படிப்பவர்களுக்குச் சிறு நெருடலை ஏற்படுத்தும், ஆனாலும் சென்னை மக்களுக்கு அவர் தொண்டு செய்ததை நூல் காட்டுகிறது.
மொத்தத்தில் தொகுப்பாசிரியர், பதிப்பாளர் இருவரும் போற்றப்பட வேண்டியவர்கள்.