முனைவர் க.நாராயணன். வெளியீடு: மாரி பதிப்பகம், "சிவகலை' இல்லம், கொட்டுபாளையம், புதுச்சேரி-8. (பக்கம்: 488).
"நிகழ் காலம் என்பது கடந்த காலத்தின் நீட்சி, வருங்காலத்தின் தொடக் கம்' என்ற சொல்லாடலுடன் தொடங்கும் இந்தப் புத்தகம், அரசியல் வரலாற்றின் தோற்றத்திலிருந்து அதன் பரிணாம வளர்ச்சி பற்றி விரிவாக விவாதிக்கிறது. பிளேட்டோவில் ஆரம்பித்து மகாத்மா காந்தி வரை, பல அரசியல் சிற்பிகளின் பங்களிப்பு குறித்து அலசி ஆராய்கிறது இந்தப் புத்தகம். மாவீரன் அலெக்சாண்டருக்கு ஆட்சி செய்யும் அருங்கலை பற்றி போதித்த அரிஸ்டாட்டில், கத்தோலிக்க மத உணர்வை அரசியலில் நுழைத்த செயின்ட் அகஸ்டின், அதிகார வேட்கையே மானுட வாழ்வை இயக்குகின்ற ஆற்றல் என்ற அரசியல் தத்துவத்தை அறிமுகப்படுத்திய மாக்கியவல்லி, பிரெஞ்சுப் புரட்சியின் பிதாமகனான ரூசோ, பொருளாதார மேதையான ஜான் ஸ்டூவர்ட் மில் ஆகியோர் பற்றியெல்லாம் அதி அற்புதமான தகவல்கள் இந்தப் புத்தகத்தில் ஏராளமாக காணப்படுகின்றன.
காரல் மார்க்ஸ் குறித்து ஆசிரியர் எழுதியுள்ளவை மிகச் சிறப்பாக உள்ளது. இன்றைய சந்தர்ப்பவாத
அரசியல்வாதிகளின் சுயநல முகமூடியைக் கிழித்தெறியும் கூர்மையான கருத்துக்களை படிக்கும்போது ஆச்சரியத்தில் நமது விழிகள் விரிகின்றன.
நூலாசிரியர், அரசியல் அறிவியலில் நன்கு கற்றுத் தேர்ந்தவர் என்பதை இந்தப் புத்தகத்தை படிக்கும் அனைவரும் ஏற்றுக் கொள்வர்.
ஆனால் ஆசிரியர், அனேக முக்கிய அரசியல் மாந்தர்களின் பெயர்களைத் தமிழ்ப்படுத்தும்போது வாசகர்களை சிரமப்படுத்துகிறார். இசுடாலின், இடால்ஸ்டாய், இடேவிட் இயூம், எகேல், இலெனின் என்றெல்லாம் எழுத வேண்டுமா? கலைச்சொற்கள் என்ற பிற்சேர்க்கை பகுதி எழுதிய ஆசிரியர் பாட்டுக்குரியவர்.