ஸ்ரீ அன்னை பப்ளிகேஷன்ஸ், 7, அருணாச்சலபுரம், 2வது தெரு, அடையாறு, சென்னை-20. (பக்கம்: 256)
கிறிஸ்தவர் வாடிகனுக்கும், முகமதியர் மெக்காவுக்கும் சென்று வருவதை வாழ்நாள் நோக்கமாகக் கொண்டிருப்பர். இந்துக்களோ கயிலாயம் சென்று வருவதை உயிரின் நோக்கமாகக் கொண்டுள்ளனர். காரணம் 18 ஆயிரம் அடி உயரத்தில், இயற்கையின் அதி அற்புதமாய்த் திகழும் கயிலாயம் சென்று திரும்புவதே தெய்வச் செயல் என்னும் அடிநாதமான கருத்தை இந்த நூல் ஆணித்தரமாக விளங்குகிறது. இந்த நூலின் ஆசிரி யர் மஞ்சுளா ரமேஷின் எழுத்து, தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்லும் வடகயிறாகப் படிப்பவர் மனதை சுண்டி இழுத்துச் சென்று, கட்டிப் போட்டுவிடுகிறது. தான் பெற்ற அனுபவத்தை, இந்த நூலைப் படிக்கும் வாசகர்களும் பெறும் வகையில், பக்தி உணர்வுடன், திரைக்கதை போல சம்பவங்கள், உரையாடல்களை எழுதி, ஒருவித திரி ல் இருக்க வேண்டும் என்பதற்காக வாசகருக்கு வியர்வை உண்டாகும்படி பயத்தையும் தந்து, முடிவில் கிளைமேக்ஸ் காட்சியாக மூன்று தெய்வங்களையும் தரி சிக்க வைக்கிறார். நேபாளத்தில் உள்ள முக்திநாத் பெருமாள் ஜம்மு காஷ்மீர் குகையில் உள்ள அமர்நாத் பனிலிங்கம், சீன எல்லையில் உள்ள கைலாச வெண்பனி மலை மூ ன்றையும் சாகசங்களோடும், சகதோழிகளோடும் சென்று தரி சனம் செய்த பக்திப் பரவச அனுபவத்தை, படங்களுடன் வழங்கியுள்ளார் இந்நூல் ஆசிரியர்." அனுபவங்கள் பாறைகளில் செதுக்கி வைத்த சிற்பங்கள் என்று அவர்கள் கூறுவதுபோல, படித்து முடித்ததும் இந்த நூல் மனதைச் செதுக்கி தெய்வச் சிலையாக்கிவிடுகிறது. நம்மை கயிலாயம் அழைத்துச் செல்லும் நவீன காரைக்காலம்மையார் ஆகிறார் நூலாசிரியர்.