உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2வது முதன்மைச் சாலை, மையத் தொழில் நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600 113. (பக்கம்: 824).
`பிறக்கமுத்தி ஆரூரில் காண முத்தி
தம்பரத்தைப் பிரியா துற்றாங்கு
இறக்கமுத்தி காசிதனில், நினைக்க முத்தி
கோணகிரி என்பர். இந்தச்
சிறப்புறுங்கோ முத்திநகர் பிறந்தவர்க்கும்
இறந்தவர்களுக்கும் தெரிசித் தோர்க்கும்
மறப்பறஉள் நினைத்தவர்க்கும் துதித்தவர்க்கும்
இருந்தவர்க்கும் வழங்கும் முத்தி'
என்று திருவாவடுதுறைப் புராணம் கூறகிறது.
உலகத்திலேயே தமிழ் நாட்டில் தான் கோயில்கள் அதிகம். தமிழ்நாட்டிலும் காவிரி பாயும் சோழ நாட்டில் தான் கோயில்கள் மிகுதி. பாடல் பெற்ற 274 சிவத்தலங்களில் சோழ நாட்டுத் தலங்கள் மட்டும் 190. அதிலும் காவிரிக் கரையில் உள்ள கோயில்கள் தான் அதிகம்.
கோயில்களும், மடங்களும் நிறைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் சைவமும் சமயப் பற்று தழைத்து ஓங்கின. உமையம்மை பசு வடிவில் இறைவனை வழிபட்ட தலம் திருவாவடுதுறை. இறைவன் மாசிலாமணியீசர் இறைவி ஒப்பிலா முலையம்மன். திருவாவடுதுறை பல்லாற்றாலும், சிறப்புப் பெற்றது. திருமூலர் தவம் இயற்றி திருமந்திரம் வழங்கிய பதி. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகியோர் பாடல் பெற்ற தலம். சேந்தனார் வழிபட்டு திருவிசைப்பா பாடிய தலம். திருமாளிகைத் தேவர் வாழ்ந்து, தவமியற்றி, முத்தி பெற்ற தலம்.
திருக்கயிலை பரம்பரையிலேயே நமச்சிவாய மூர்த்திகளே முதல் ஆதீனகர்த்தராகத் திகழ்ந்து ஆதீனத்தை நிறுவியவர். சாத்திரம், சாமிநாத முனிவர் என்பவரால் முன்னூறு ஆண்டுகளுக்கு முன் திருவாவடுதுறைப் புராணம் இயற்றப்பட்டது. பதினெட்டு அத்தியாயங்களில் 2560 செய்யுட்கள் அடங்கிய இந்நூல். ஓலைச் சுவடியில் இருந்த இந்த நூலை நூலாசிரியர் மகுந்த முயற்சியுடன் இரண்டாண்டுகள் ஆய்வு செய்து, செய்யுட்களுக்கு சீர் பிரித்துப் படி எடுத்து, இப்போது சிறந்த நூலாக அச்சிட்டுப் பதிப்பித்துள்ளனர்.
தம் ஐம்பதாவது வயதில் ஐம்பதாவது நூலாக வெளியிட்டிருக்கும் நூலாசிரியரின் இலக்கியத் தொண்டைப் பாராட்ட வேண்டும்.
உரைச் சுருக்கங்களைத் தெளிவாக எல்லாரும் படித்துச் சுவைக்கும் வண்ணம் திறம்பட கொடுத்திருக்கிறார். செய்யுள் முதற்குறிப்பிட்ட அகராதி நூலின் இறுதியில் கொடுக்கப்பட்டிருக்கிறது