கிழக்கு பதிப்பகம், 16, கற்பகாம்பாள் நகர், மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 820).
`எறும்பு இழுத்துக் கொண்டு போகும் வெல்லக் கட்டியைப் போலப் பேராசையோடும் வெறியோடும், உவகை எனது இருப்பிடத்துக்குள் இழுத்துக் கொண்டு வந்து விட முயன்றதன் விளைவு தான் எனது எழுத்துக்கள்' இப்படி முன்னுரையில் சுயதரிசனம் தரும் ராமகிருஷ்ணனின் 90 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
`தாவரங்களின் ரகசிய வாழ்க்கையை' மனிதனோடு ஒப்பிட்டு பெரும் தாவரவியல் ஆய்வையே அம்பலப்படுத்தும் `தாவரங்களின் உரையாடல்' சிறுகதையில் புதுமை. தென்னாட்டுப் பழங்கதையை ஒட்டி படைக்கப்பட்டு `கானகப்புவியின் மனைவி' மாயாஜாலக்கதை
`ஓர் எறும்பு,' `ஒரு சிற்பம்,' `ஒரு சாவி,' `ஒரு காகம்,' `ஒரு ரோமானிய நாணயம்,' `ஒரு குடை,' `ஒரு தேதி' இப்படி `ஒரு' பக்கக் கதைகளை உள்ளடக்கிய `நுனிக்கதைகள்' அனுபவ வெளியீடு.
`விடாத மழையைப் போலவே பால்யத்தின் துளிகள் எப்போதும் பெய்தபடி இருக்கின்றன எனக்குள். கடந்த காலத்தின் காட்சிகள் என்னைக் கைப்பற்றி இழுக்கின்றன. நான் சரிந்து கொண்டே இருக்கிறேன்' (656) என்று கடக்க முடியாத நதியாக `பால்ய நதி'யையும் படைத்துள்ள இந்நூலாசிரியரின் `வெளியில் ஒருவன்,' `காட்டின் உருவம்,'
`வெயிலை கொண்டு வாருங்கள்,' போன்ற சிறுகதைகள் வாசகர்களின் மனத்தை ஆக்கிரமிக்கக் கூடியவை. மனிதனை விட இயற்கை நேசிப்பு பல கதைகளில் பளிச்சிடுகின்றன. யதார்த்தமான நடையமைப்பு, வசீகரமில்லாத எளிமையான எழுத்தோட்டம், கதைபுனையும் புது உத்தி, மேலை நாட்டு எழுத்தாளர்களை உள்வாங்கி எதற்கும் அஞ்சாமல் எழுத்தில் வடிக்கும் சோதனை முயற்சி எனப் பல கோணங்களிலும் தன்னை வளைத்துக் கொண்டும், தன்னில் மறைந்து கொண்டும் அவர் செய்துள்ள மாயாஜாலங்களை இத்தொகுப்பு நூலென்று கூறலாம். சிறுகதைகளில் புதுமையைச் செய்து வரும் இந்த எழுத்தாளரின் கதைகளை கிழக்குப் பதிப்பகம் தொகுத்துள்ளது சிறப்பாக உள்ளது.