உங்ககிட்ட சொல்லாம இது நடந்தது வருத்தமாத்தாம்ப்பா இருக்கு. ஆனா எனக்கு வேற வழி தெரியல. கண்டிப்பா உங்களால இத ஒப்புக்க முடியாதுன்னு தெரியும்!' என்றேன் தயக்கமுடன். என் தயக்கம் போலியானதுதான் என்பதை உணர்ந்தே இருந்தேன். இருப்பினும் அது அவருக்கு ஒரு சிறு ஆறுதலை அளிக்க முடிந்தால் போதுமே.
'வேத்து ஜாதிதானே?' தீர்மானமாகக் கேட்டாள் அம்மா. நான் பேசாதிருந்தேன்.
'தாலி கட்டலியா? ரிஜிஸ்டர் கல்யாணமா?' என்றார் அப்பா.
இங்கே நான் பேசியாகவேண்டியிருந்தது. இல்லப்பா. கல்யாணம்னு நாங்க எதுவும் பண்ணிக்கல. பிடிச்சிருந்தது. சேர்ந்து வாழ ஆரம்பிச்சிட்டோம்.' அவரது அதிர்ச்சியை, அவர் வெளிக்காட்டாவிட்டாலும்என்னால் உணர முடிந்தது. அம்மாவுக்குத்தான் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. கவனமாகச் சொற்களைத் தேர்ந்தெடுத்து நாலைந்து நிமிடங்கள் திட்டினாள். பிறகு சமநிலைக்கு வந்து, ஏண்டி, ஒரு தாலிய கட்டிண்டுட்டா, ஊர் வாய அடைக்கலாமோல்லியோ?' என்று அழுதபடி கேட்டாள். இதற்குமேல் வளர்க்க எனக்கு இஷ்டமில்லை. ரெண்டு தாலியெல்லாம் கட்டிண்டு நான் உத்தியோகத்துக்குப் போகமுடியாதும்மா'
குங்குமம் வார இதழில் தொடராக வெளிவந்த பா. ராகவனின் 'ரெண்டு', வாரம்தோறும் எதிர்கொண்ட எதிர்ப்புப் புயல்கள் ஏராளம்.
பெயரிடமுடியாத ஓர் உறவின் சிக்கல்களை மிக நுணுக்கமாக விவாதிக்கும் இந்நாவல், சற்றே தடம் பிசகியிருந்தாலும் ஆபாசக் கடலில் விழுந்திருக்கும். மிகத் திறமையாக, லாகவமாக, கத்தி மேல் நடப்பதுபோல் விவரித்துக்கொண்டு போகிறார் ஆசிரியர்.