தொகுப்பாசிரியர்கள்: வல்லிக்கண்ணன், ப.முத்துக்குமாரசாமி, வெளியீடு: கலைஞன் பதிப்பகம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 830 + 840. விலை: ரூ.400 + 400).
கடந்த 1882ல் துவக்கப்பட்ட சுதேசமித்திரன் பத்திரிகை, கதை, கட்டுரை, கவிதைகளை வெளியிடுவதற்காக வார இதழ் ஒன்றை 1929ல் ஆரம்பித்தது. இன்று வரை மிகச் சிறந்த நாவலாக அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட தி.ஜானகிராமன் எழுதிய "மோக முள்' சுதேசமித்திரன் வார இதழில் தான் தொடராக வெளிவந்தது. மு.கருணாநிதி எழுதிய "பரப்பிரம்பம், க.நா.சு., எழுதிய "படித்திருக்கிறீர்களா' போன்ற மிகச் சிறந்த கட்டுரைத் தொடர்கள் இந்த இதழில் தான் வெளிவந்தன.
இத்தகைய இலக்கிய பாரம்பரியப் பெருமையுள்ள இதழிலிருந்து சிறந்த எழுத்தாளர்களின் தரமான படைப்புகளை தொகுத்து, இன்றைய வாசக உலகத்திற்கு, கலைஞன் பதிப்பகத்தார் வழங்கியிருக்கின்றனர். அரசியல், இலக்கியம், சமூகவியல், இசை போன்ற பிரிவுகளில் அற்புதமான கட்டுரைகள் உள்ளன. அமரகவி பாரதி, அறிஞர் வ.ரா.சுத்தானந்த பாரதியார், முனைவர் மு.வ., ஆகியோர்களின் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. முதல் தொகுப்பில் மட்டுமே கட்டுரைகள் மற்றும் மரபுக் கவிதைகள் காணப்படுகிறது. தொகுப்பாளர்கள் இரண்டாம் தொகுப்பில் சிறுகதைகள் மட்டுமே போட்டு நிரப்பி விட்டனர். இசை தொடர்பாக அற்புதமான பல கட்டுரைகள் "மித்திரன்' இதழில், ஐம்பது அறுபதுகளில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. தொகுப்பாளர்களின் கவனத்தை இந்தப் பிரிவு ஏனோ கவரத் தவறிவிட்டது. "மித்தரனில்' இசை தொடர்பான கட்டுரைகள் எழுதிய "நீலம்' இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
சிறுகதைகள் அதிகம் இடம் பெற்றிருக்கிறது. கட்டுரைகள், கவிதைகளுக்கு மேலும் சில பக்கங்களை ஒதுக்கியிருக்கலாம். எம்.ஜி.ஆர்., அவர்களை புதிய கார் வழங்குமாறு நண்பர்களும் உறவினர்களும் தொடர்ந்து கேட்டுக் கொண்டும், அவருக்கு அதில் ஆர்வம் இல்லாததைப் பற்றிய கட்டுரையும், "சாந்தோம் யுத்தம்' என்ற கட்டுரையும் இந்த தலைமுறை வாசகர்களுக்கு புதிய தகவல்களை வழங்குகின்றன. இதுபோல் பல கட்டுரைகள்.
ஐம்பதாண்டுகளுக்கு முன் இருந்த பத்திரிகை, எழுத்தாளர்கள், வாசகர்கள் பற்றி தெரிந்து கொள்ள இதுபோன்ற தொகுப்புகள் நமக்குத் தேவை. ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு மிகவும் உபயோகமான தொகுப்பு.