வெளியீடு: சிவகாமி பப்ளிகேஷன்ஸ், திருவான்மியூர், சென்னை-41, நூல் கிடைக்குமிடம்: பிலிம் இன்பர்மேஷன் சென்டர், 208, பீட்டர்ஸ் ரோடு. ராயப்பேட்டை, சென்னை-14.
ஆசிரியர் பிலிம்நியூஸ் ஆனந்தன் கடந்த 52 ஆண்டுகளில் தனிமனிதனாக திரைப்பட வரலாற்றைத் திரட்டிய பெருமை கொண்டவர்.
இந்த நூல் தமிழ்த்திரை உலக களஞ்சியமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. ராஜாஜியும் திரைக்கலைஞராக இருந்த முதல்வர் என்ற தகவலும் அதை வரிசைப்படுத்திய முறையும் சிறப்பானது. புத்தகத்தை பிரித்ததும் வண்ணப்படத்துடன் தரப்பட்ட தகவல்.
மொத்தம் 37 தலைப்புகளில் கறுப்பு-வெள்ளை, வண்ணப் படங்களுடன் தொகுக்கப்பட்ட விதம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. டாக்டர் பட்டம் பெற்ற கலைஞர்கள் பட்டியலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா 5 முறை டாக்டர் பட்டம் பெற்ற தகவல் உள்ளது.
சிறப்பாக திரைப்படத் தொகுப்பு சேகரி த்திருக்கிறார் என்பதை கடந்த 1931ம் ஆண்டுமுதல் இன்றைய தேதி வரை வெளியான படப்பட்டியல் வெளியிட்ட பாங்கு ஆகும். இதில் மொழி மாற்றப் படங்களும் அடங்கும். திரைக்கலைஞர்கள் பெயரில் அஞ்சல் தலைகள் என்ற தலைப்பில் ஏவி.மெய்யப்பன், கே.சுப்பிரமணியம். எல்.வி.பிரசாத் என்ற விளக்கமும், அதற்கான அஞ்சல் தலை, அவர்களின் படைப்பில் சில காட்சிகள் என எல்லாமே வண்ணத்தில் உள்ளன.
இரட்டை வேடப்படங்கள் விவரம், திரைப்படமாகிய நாவல்கள் என்ற தலைப்புகளில் உள்ள தகவல்கள் ஆசிரியரி ன் அபார முயற்சிக்கு எடுத்துக்காட்டாகும். கடைசியாக 4 பக்கத் திருத்தமும் இணைத்த ஆசிரியரின் உணர்வு பாராட்டப்பட வேண்டியதாகும்.
நல்ல வழுவழுப்புத் தாளில், நேர்த்தியான அச்சுடன் சிறந்த படைப்பாக இந்த நூல் மலர்ந்திருக்கிறது. திரையுலகத்தினர் மட்டும் அல்ல, தமிழ் கூறும் நல்லுலகமே பாராட்டும் படைப்பாகும்.