பெற்றால் மட்டும் போதுமா?: நூலாசிரியர்கள்: டாக்டர் இரா.நரசிம்மன், ஜெயவதி நரசிம்மன். வெளியீடு: பத்மா பதிப்பகம், 21, லோகநாதன் நகர், 2வது தெரு, சூளைமேடு, சென்னை-94. (பக்கம்: 152).
சுனாமியால் அனாதைகளாக்கப்பட்ட இளந்தளிர்களின் நல்வாழ்விற்கே இந்நூலின் விற்பனைத் தொகை செலவிடப்படும் என்று கண்ணீர்க் காணிக்கையுடன் தொடங்கும் இந்நூல் குடும்பப் பொறுப்பும், சமுதாயப் பொறுப்பும் மேம்பட்ட நூலாசிரியர்களால் வளரும் தலைமுறையினர், வளர்க்கும் தலைமுறையினரின் உளவியல் அறிந்து மிக நுணுக்கமாக, எளிமையாகப் படைக்கப்பட்டுள்ளது.2"ஆளும் வளரணும், அறிவும் வளரணும்' எனத் தொடங்கி, "வாழ்க வளமுடன்' முடிய ஒன்பது கட்டுரைகள் நவமணிகள். குழந்தைகளின் உடல் நலம், மனநலம் சார்ந்த விஷயங்களை புரிந்து கொண்டாலே வளர்ப்பிலும் வெற்றி பெறலாம் என்றும் கூறும் நூலாசிரியர்கள் பெற்றோர் செய்ய வேண்டிய கடமைகளாக பட்டியலிடுவது அன்பு காட்டல், அரவணைத்தல், அங்கீகரித்தல், அக்கறை காட்டல், ஊக்குவித் தல், உற்சாகப்படுத்துதல், பாராட்டுதல், விட்டுக் கொடுத்தல், நம்பிக்கை யை வளர்த்தல், பாடத் தேர்வு, பொழுதுபோக்கு இப்படிச் சில.
விவேக சிந்தாமணி கூறும் கல்வியின் சிறப்பு, அருணாசலக் கவிராயர் கூறும் நல்லோரின் பண்புகளும், இந்நாட்டு மன்னர்களாக வளரும் குழந்தைகள் அறிய வேண்டும் என்பதையும், நாலடியார், திருக்குறள் கருத்துக்களை ஆங்காங்கே எடுத்தாண்டுள்ளதும் நூலுக்குச் சிறப்பு.
அனுபவ அறிவின் வெளிப்பாடாக அமைந்துள்ள இக்கட்டுரைகள் வளரும் தலைமுறையினருக்குப் பயன்படக்கூடியது. "ஊருக்கு உழைப்பதையே யோகமாக' கருதிச் செயல்படும் நூலாசிரியர்களின் முயற்சி பாராட்டத்தக்கது, பயன் தரவல்லது.