விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
வேர்களை அறுத்தெரிந்து வெடித்துக் கிளம்பிய ஒரு வித்தாக, சாதியத்தின் கொடிய நரம்புகளை அறுத்துக்கொண்டு தாழ்த்தப்பட்ட மகர் இனத்தின் இருண்ட கருவறையிலிருந்து வெளிவந்த
ஒரு விடிவெள்ளி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்.
பள்ளி நாட்களிலேயே சாதியத்தின் கொடுங்கரங்களால் தீண்டப்பட்டு மனமெங்கும் புண்ணாகிப்போன பீமாராவ் சக்பால் என்ற இளைஞர்தான் அம்பேத்கராக மாறினார்.
வேதனையில் வெந்து நொந்துகொண்டிருந்த அந்த நேரத்தில் கல்வி என்ற தற்காப்பு ஆயுதம் அவர் கைக்குக் கிடைத்தது. கூரான அந்த ஆயுதம் சாதியத்தின் நரம்புகளை பதம் பார்க்கத் தொடங்கியது. இதனால், தீண்டாமை, ஏற்றத்தாழ்வு, ஒடுக்குமுறை என்று பிரயோகப் படுத்திக்கொண்டிருந்த சாதிய, துவேஷ சக்திகள் அம்பேத்கரை கண்டு அஞ்சத் தொடங்கின.
இதுதான் சமயம் என்று உணர்ந்த அவர், தன் மக்களுக்கு பாதுகாப்பு அரணாக கல்வி என்னும் ஆயுதத்தைத் தீவிரமாகப் பயன்படுத்தினார். சட்டம் பயின்றார். பல பட்டங்கள் பெற்றார். ஆலய நுழைவு போராட்டத்தை கையில் எடுத்தார். தொடர்ந்து தம் மக்களின் விடுதலைக்காக ஓங்கிக் குரல் எழுப்பினார். இந்திய அரசியல் சரித்திரத்தின் பங்கங்களைப் புரட்டும்போது அம்பேத்கரின் பெயர் இல்லாத அத்தியாயங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவரின் பங்களிப்புகள், செயல்பாடுகள் ஏராளம். அப்படிப்பட்ட ஒப்பற்ற தலைவர் அம்பேத்கரின் வரலாற்றை நூலாசிரியர் அஜயன் பாலா எளிய நடையில் எழுதியிருக்கிறார்.
ஆனந்த விகடனில் நாயகன் வரிசையில் வெளியான அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்து அபூர்வ புகைப்படங்களுடன் இப்போது நூலாக வெளியிடுவதில் விகடன் பிரசுரம் பெருமை கொள்கிறது.
இந்தியனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்களில் அம்பேத்கரின் வரலாறும் மிக முக்கியமானது.