விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
உயிரினங்களிலேயே சிரிக்கத் தெரிந்தது மனித இனம் மட்டும்தான். எந்த இடத்திலும் பொருந்தி, ரசிகனை உணர்வின் இறுக்கங்களிலிருந்து விடுபட வைத்து மனத்தை லேசாக்குகிறது நகைச்சுவை. எனினும் நமது வாழ்க்கைச் சூழலில் நகைச்சுவைக்கு நேரம் ஒதுக்கி ரசிக்க எவ்வளவு சந்தர்ப்பம் கிடைக்கிறது? அப்படியொரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்து நமது நகைச்சுவை உணர்ச்சிக்குத் தீனி போடுகிறது நூலாசிரியர் துக்ளக் சத்யாவின் அரசியல் கலாட்டா.
முன்பின் யோசிக்காமல் கேட்டவுடன் வாய்விட்டுச் சிரிக்கும் நகைச்சுவை, சிரித்தபின் சிந்திக்க வைக்கும் நகைச்சுவை, யோசனைக்குப்பின் வாழ்க்கையின் ஆழப்பகுதிக்கு அழைத்துச் செல்லும் நகைச்சுவை... சிரிப்பினூடாக யதார்த்தத்தை உணர்த்தும் நகைச்சுவை என்று பல வகைகள் உண்டு. அரசியல் கலாட்டா, படிக்கும்போது சிரிக்க வைக்கும். படித்து முடித்ததும் சிந்திக்க வைக்கும்!
இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளவை அனைத்தும் துக்ளக் இதழில் வெளியான அரசியல் நையாண்டிக் கட்டுரைகளே. சமீப கால அரசியல் சார்ந்த கட்டுரைகள். எவர் மனத்தையும் புண்படுத்தாமல், எதிராளிகளையும் ரசிக்க வைக்கும் நகைச்சுவைப் பாணி நூலாசிரியர் துக்ளக் சத்யாவினுடையது. துக்ளக் பத்திரிகையின் நையாண்டிப் பாரம்பரியத்தை இதில் தெளிவாகக் காணலாம். முழு நீள நகைச்சுவைப் படம் என்று கூறுவது போல் இது ஒரு முழு நீள நகைச்சுவைப் புத்தகம்.இந்தக் கட்டுரைகளுக்கு அரஸ் வரைந்திருக்கும் ஓவியங்களும் பார்த்தவுடனேயே சிரிக்கத் தோன்றும் வகையில் அமைந்திருப்பது மற்றுமொரு ப்ளஸ் பாயிண்ட்.
தற்கால அரசியல் சூழ்நிலையைப் புரிந்துகொள்ள வைக்கும் இனிப்பு மருந்து இந்த நூல்!