விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
உலகப்புகழ் பெற்ற மனிதர்கள் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் அவர்கள் விட்டுச்சென்ற ஆக்கம் தரும் படைப்புகளும், ஊக்கம் தரும் செயல்களும் பல நூற்றாண்டுகள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கும். அவர்களுடைய சாதனைகள் என்றும் நிலைத்திருக்கும்; நினைவுகள் எப்போதும் துளிர்த்துக் கொண்டிருக்கும்.
உலகத் திரைப்பட வரலாற்றில் யாரும் எளிதில் எட்டமுடியாத உயரத்தைத் தொட்டவர் சார்லி சாப்ளின். அவருடைய வாழ்க்கையை அழகாகச் சொல்கிறது இந்நூல்.
அடிமட்டத்திலிருந்து வாழ்க்கையின் உச்சத்துக்குச் சென்ற சார்லி சாப்ளினின் வாழ்க்கை, எத்தகைய சோதனைகள் நிறைந்தது என்பதையும், அதை எவ்வாறெல்லாம் எதிர்கொண்டு வெற்றி பெற்றார் என்பதையும், உருக்கமாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர் அஜயன் பாலா.
இளம்வயதில் தந்தையின் ஆதரவில்லாதது, தாய் மனநலம் பாதிக்கப்பட்ட நிலை, பட்டினி இரவுகளோடும் பராரியாக அவமானங்களோடும் போராடிப் பெற்ற வெற்றிகள், தன்னை உதாசீனப்படுத்திய காதலி ஹெட்டி, படங்களின் மூலம் கிடைத்த பல மில்லியன் டாலர் நோட்டுகள், அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படுதல், ஆஸ்கர் விருது, அமெரிக்காவுக்கே திரும்ப அழைத்துக்கொள்ளுதல்... இப்படி சார்லி சாப்ளினின் போராட்டம் நிறைந்த வெற்றிக் கதையை, அபூர்வமான புகைப்படங்களுடன் படிக்கப் படிக்க நம் மனதில் உத்வேகம் பிறக்கிறது.
சாப்ளின் வாழ்க்கையிலிருந்தும், அவர் வழங்கியத் திரைப் படங்களிலிருந்தும் நாம் கற்றுத் தெரிந்துகொள்ள வேண்டியவை நிறைய உள்ளன. குறிப்பாக, இளைஞர்களுக்கும், வளரும் திரைப்படக் கலைஞர்களுக்கும் இந்நூல் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.