விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
செழிப்பான, வளமான நாடுகளைத் தங்களின் பீரங்கிக் குண்டுகளாலும், துப்பாக்கி ரவைகளாலும் அடிமைப் படுத்தி, அங்குள்ள மக்களை கொத்தடிமைகளாகக் கொட்டடியில் அடைத்துக் கொடுமைப் படுத்தியவர்கள் ஐரோப்பிய வெள்ளை இனத்தவர்.
வெள்ளை, கறுப்பு என நிறம் பிரித்து கதைகளையும் விளையாட்டுகளையும் உருவாக்கி மனரீதியாகவும் தாழ்வுப் படுத்தி, கறுப்பு இன மக்களுக்கு அடிமை விலங்கைப் பூட்டிய இந்தக் கொடுமை, தென் ஆப்பிரிக்காவில் வேறூன்றியதால், அந்த மக்கள் தங்கள் நாட்டிலேயே அடிமைகளாக நானூறு ஆண்டுகள் வாழ நேர்ந்தது.
இந்தச் சூழ்நிலையில், தென் ஆப்பிரிக்காவின் ஒரு சிறிய கிராமத்தில், சாதாரணக் குடும்பத்தில் பிறந்த நெல்சன் மண்டேலா, அடிமைத்தனத்தை எதிர்த்து வீறுகொண்டு எழுந்தார்! தன் சிந்தனையாலும், செயலாலும், பல தேசங்களில் சிதறிக் கிடந்த
தனது கறுப்பு இன மக்களை ஒன்றிணைத்து ‘ஆப்பிரிக்கா, ஆப்பிரிக்கர்களுக்கே!’ என்ற மன உறுதியோடு போராடினார். பல இன்னல்களைச் சந்தித்த மண்டேலா, 27 ஆண்டுகள் கடுமையான சிறைவாசத்துக்குப் பிறகே சுதந்திரக் காற்றைச் சுவாசித்தார்.
உலக சமாதானத்துக்கான நோபல் பரிசையும், சுதந்திரம் அடைந்த தென் ஆப்பிரிக்காவின் முதல் அதிபராகவும் பொறுப்பேற்ற நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை வரலாற்றை, நெஞ்சுருகும் நடையில் விவரித்து எழுதியிருக்கிறார் நூலாசிரியர் அஜயன் பாலா. ஆனந்த விகடனில் ‘நாயகன்’ வரிசையில் தொடராக வெளிவந்து, நல்ல வரவேற்பைப் பெற்ற அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
உலகத் தலைவர்களின் சரித்திர நூல்கள் வரிசையில், குறிப்பிடத் தகுந்த இடத்தைப் பெற்று, இந்த நூலும் சிறப்படையும் என்று நம்புகிறேன்.