விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
ஒவ்வொரு டிசம்பர் சங்கீத சீஸனிலும் சென்னை நாரதகான சபாவில் ஞானாம்பிகாவின் கேன்டீன் ரொம்பப் பிரபலம். சபாவில் நடக்கும் கச்சேரிகளைக்கூட இரண்டாம் பட்சமாக்கிவிட்டு ஞானாம்பிகாவின் அடை & அவியலுக்கு அணி திரண்டு வருபவர்கள் அநேகர்! இங்கு சாப்பிட வருபவர்களை, வாங்கோ... வாங்கோ.. என்று வாய் நிறைய வாஞ்சையோடு அழைத்து விருந்தோம்பல் செய்யும் ஞானாம்பிகா ஜெயராமனின் குழுவினர் அதிகம் சம்பாதிப்பது நற்பெயரை!
தமது நிறுவனத்தின் பெயரை வாசித்தாலே, வயிறு நிறைகிற அளவுக்கு புகழையும் பூரிப்பையும் சம்பாதித்து வைத்திருக்கிறார் ஜெயராமன். தனது வாழ்வின் ஆரம்ப காலத்தில் ஒரு வேளை உணவுக்குக்கூட வழியின்றி ஏங்கித் திரிந்த சோகத்தை அவர் சொல்கிறபோது மனது சுருக்கென வலிக்கிறது. வாழ்க்கை ஒவ்வொருவரையும் சுற்றிப் போடும் வலைப் பின்னலையும், அதன் திணறடிப்புகளையும் அவை அழுத்தமாக உரைக்கின்றன. அதே நேரம் உழைப்பும் திறமையும் இருக்குமிடத்தில் கண்டிப்பாக உயர்வு ஓடோடி வந்து ஒட்டிக் கொள்ளும் என்பதற்கும் இந்த அனுபவங்கள் சாட்சியாகின்றன!
தனது வாழ்வில் ஏற்பட்ட வலிகளையும், உள்ளத்தை உளியாக்கி அவற்றை உடைத்தெறிந்த வழிகளையும் தெளிந்த நீரோடையாக ஜெயராமன் சொல்வதை இந்த நூலில் படிக்கும்போது நெகிழ்ச்சியில் நெஞ்சு புடைக்கும். ஒரு சமையல்காரரால் இதெல்லாம் எப்படி சாத்தியமானது!என்ற வியப்பு மனம் முழுக்க வியாபிக்கும்.
வறட்டி விற்று ஆகாரத்துக்கு வழி தேடிய ஆரம்ப காலப் போராட்டங்கள் தொடங்கி, சாப்பாட்டு உலகில் எவரும் எட்ட முடியாத அளவுக்கு சாம்ராஜ்யம் படைத்தது வரையிலான தமது அனுபவங்களை இதில் சுவையாக விவரிக்கிறார் ஜெயராமன்.