விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
இன்றைய இந்திய அரசியலை அலசி வரும் இளைய தலைமுறையினர், ஆங்கில ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடந்த இந்திய அரசியல் சூழ்நிலை பற்றி அதிகம் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.
சுதந்திரப் போராட்ட கால அரசியல் சூழ்நிலையையும், அரசியல்வாதிகளின் போராட்ட வாழ்க்கையைப் பற்றியும் அறிந்து கொள்ள, ஓர் அரசியல்வாதியின் அன்றாட அனுபவங்களே சாட்சியாக இருக்க முடியும். அத்தகைய ஓர் அரசியல்வாதிதான் தீரர் சத்தியமூர்த்தி. காமராஜரின் அரசியல் குருவே சத்தியமூர்த்தி என்பது, அவரின் புகழுக்கு ஒரு மகுடம். சத்தியமூர்த்தி எழுதிய, அவருக்கு எழுதப்பட்ட கடிதங்கள் அடங்கிய வரலாற்றுப் பெட்டகம் இந்த நூல். இதில் இடம் பெற்றுள்ள கடிதங்கள், சத்தியமூர்த்தி என்ற தனி மனிதரின் குணநலன்களைத் துல்லியமாக வெளிப்படுத்துகின்றன. ராஜாஜி, மகாத்மா காந்தி உள்ளிட்ட பெருந் தலைவர்களுடன் அவர் நிகழ்த்தியிருக்கும் கருத்துப் பரிமாற்றம், ஒப்பற்ற அந்த மனிதரின் நியாயமான கோட்பாடுகளை வெளிப்படுத்துகிறது.
சத்தியமூர்த்தியின் கடிதங்கள், தந்திகள், பத்திரிகைகளில் எழுதிய பொதுவான கட்டுரைகள், தலைவர்கள் பத்திரிகையில் எழுதியவற்றுக்கு சத்தியமூர்த்தி பத்திரிகையின் மூலமாகவே எழுதியதும், இவர் பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளுக்கு மற்றவர்கள் பதில் எழுதியதுமான வாதப் பிரதிவாதங்கள் ஆகியவை நிறைந்த தொகுப்பு இந்த நூல்.
இங்கிலாந்தின் பிரதிநிதியாக இந்தியாவிலும் இங்கிலாந்திலும் பணியாற்றிய ஆங்கிலேய பிரபுக்களுக்கு இவர் எழுதியதும் அவர்கள் இவருக்கு எழுதியதுமான கடிதங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. இவை வெறும் கடிதப் பரிமாற்றங்கள் மட்டுமல்ல; வரலாற்று சம்பவங்கள் நிகழ்வதற்குக் காரணமாக இருந்த கடிதங்கள் அவை! உதாரணத்துக்கு, மான்டெகு _ செம்ஸ்போர்ட் சீர்திருத்தம் சுதந்திரத்துக்கு முந்தைய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வு. அந்த மான்டெகு பிரபுவுடன் சீர்திருத்தம் பற்றி சத்தியமூர்த்தி எழுதிய கடிதங்கள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. காந்தியின் ஒத்துழையாமை இயக்கம், சௌரி சௌரா நிகழ்ச்சிக்குப் பின்னர் அதை சிறிதுகாலம் நிறுத்திவைக்க வேண்டிய நிகழ்வு ஆகியவை இந்தக் கடிதங்களில் எதிரொலிக்கின்றன. சைமன் கமிஷன் வருகை, காந்தி _ இர்வின் ஒப்பந்தம் ஆகியவை பற்றியும் சத்தியமூர்த்தி கடிதம் எழுதி பதிவு செய்திருக்கிறார்.
பியர்ஸன் வெளியிட்ட, சத்தியமூர்த்தி கடிதங்கள் (பாகம்_1) ஆங்கில நூலின் தமிழாக்கம் இது. கே.வி.ராமநாதன் தொகுத்திருக்கும் இந்தக் கடிதங்களை சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார் சாருகேசி.
இந்தக் கடிதங்களைப் படித்து முடிக்கும்போது, டைம் மிஷினில் பின்னோக்கி பயணித்துவிட்டு திரும்பிய உணர்வு உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்!