விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
நதிகள் _ நாகரிகங்களின் தாய் என்பார்கள். நதிகளை மையமாக வைத்தே நாகரிகங்கள் தோன்றின. மனித வாழ்க்கைக்கு நதியின் நீர் அத்தியாவசியத் தேவை. நதிக்கரைகளில்தான் மனித இனத்தின் வாழ்க்கை ஆதாரங்கள் அதிகம் கிட்டின. பயிர் வளர்த்தும், அறுவடை செய்தும் மனிதன், தனக்கான உணவுக்கு வழிசெய்து கொண்டதற்கு முதற்காரணமாக அமைந்தவையும் நதிகளே! இப்படி நதிகளை ஒட்டியே வளர்ந்த மனிதன், தன் இனத்தின் வரலாற்றையும் கலாசாரத்தையும் நதிகளின் நினைவுகளுடனேயே பதிவு செய்திருக்கிறான்.
நம் நாட்டில் நதிகளை தெய்வங்களாகப் பார்ப்பார்கள். அவ்வாறே மதித்து வழிபாடும் செய்வார்கள். அவ்வகையில் கங்கையும் காவிரியும் மிகப் புனிதமான நதிகள் என்று போற்றப்படுவதை நாம் அறிவோம். தமிழக நதிகள் குறித்துப் பாடும் போது, காவிரி தென்பெண்ணை பாலாறு, தமிழ் கண்டதோர் வையை பொருநை நதி என்பார்கள்.
தமிழகத்தின் தென்கோடி முனையில் இருக்கும் கடைசி பெரிய ஆறு பொருநை என்று அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு. இந்த நதி வற்றாத ஜீவ நதி எனப் பெயர்பெற்றது. ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் பொதிகை மலையில் பிறந்து, அந்த மாவட்டத்திலேயே வங்கக் கடலில் கலக்கிறது என்று பெருமையாகச் சொல்வார்கள். அத்தகு சிறப்பு பெற்ற ஆற்றின் கரைகளில் வாழ்ந்த மனிதர்கள், படைப்புகள், திருத்தலங்கள், சுற்றுலா இடங்கள், கலாசாரச் சிறப்புகள் போன்றவற்றை அறிந்து கொள்ளும் ஆவல் பலருக்கும் நிச்சயம் இருக்கும்.
அவ்வகையில் இந்த நூலில், பொதிகை மலையையும், அதன் சிறப்பையும், அங்கு வாழும் காணி இனத்தவர்களின் பழைமையையும் தொகுத்திருக்கிறார் நூலாசிரியர். அகத்தியர் பிறப்பு, அகத்தியர் என்ற சித்தரின் சித்துகள், தாமிரபரணி நதியின் அணைக்கட்டுகள், அவை கட்டப்பட்ட விதம், தலைத் தாமிரபரணிக் கரையில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோயில், பட்டவராயன் கதை, பட்டவராயன் கோயில் உருவான விதம், சிவந்திபுரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, பாபநாசம் போன்ற ஊர்களின் சிறப்புகளும் ஆலயங்களும், தாமிரபரணி கரையில் ராமாயண நிகழ்வுகளும், நினைவுகூரும் இடங்களும், தாமிரபரணிக் கரையில் உள்ள நவகைலாயங்கள் என்று இந்த நூலில் ஆன்மிகத் தகவல்களும் சுற்றுலா தகவல்களும் நிறைய உள்ளன.
பாரம்பரியத்தை நேசிப்பவர்களும் வரலாற்றை வாசிப்பவர்களும் இயற்கையை சுவாசிப்பவர்களும் நிச்சயம் இந்த நூலைப் படிக்கவேண்டும்.