விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84,
நினைவலைகள் பின்னோக்கிச் செல்கின்றன. தமிழ் நாடக மேடை கொடிகட்டிப் பறந்த காலம். சபா அரங்கங்கள் நிரம்பி வழிய, ஜாம்பவான்கள் பலர் எழுதியும் நடித்தும் ரசிகர்களைப் பரவசப்படுத்தினார்கள்.
அரசு அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த கே.பாலசந்தர், நாடக உலகுக்குள் புயலாகப் பிரவேசித்தார். மேடையில் புதுமைகள் புகுத்தினார். கை தேர்ந்த சிற்பியாக பாத்திரங்களைச் செதுக்கி, பல கலைஞர்களை அதில் வாழ வைத்தார். சர்வர் சுந்தரம் நமக்குக் கிடைத்தார். மேஜர் சந்திரகாந்த் அறிமுகமானார். இன்னும் பல கே.பி. நாடகங்கள் கிடைத்தன. பார்த்தவர்கள் சிலிர்த்து, பிரமித்தார்கள். அது ஒரு பொற்காலம்!
திரையுலகம் கே.பி.யை அழைத்துக்கொண்டது. பின்னர் சின்னத் திரையும் அவரைத் தனதாக்கிக் கொண்டது. நேரமின்மை காரணமாக நாடகத்தை விட்டு அவர் விலகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது _ தற்காலிகமாகத்தான்!
ஒரு காலகட்டத்தில் கே.பி., நாடகங்கள் எழுதி, இயக்கவில்லையே தவிர, மற்றவர்கள் மேடையேற்றும் நாடகங்களைத் தொடர்ந்து பார்த்து உற்சாகப்படுத்தினார். ஆக்கபூர்வமாக விமரிசனம் செய்தார். முன்வரிசையில் கே.பி. உட்கார்ந்திருக்கிறார் என்றால் மேடையில் நடிப்பவர்கள் தேர்வு எழுதுவதுபோல் உணர்ந்தார்கள். மோதிர விரலில் குட்டுப்பட முட்டி மோதினார்கள்.
இப்போது, அஞ்ஞானவாசம் முடிந்து மீண்டும் புத்தம்புது நாடகம் ஒன்றை எழுதியிருக்கிறார் கே. பாலசந்தர். 96, தோப்புத் தெருவில் சிரிக்க வைக்கும் நகைச்சுவை உண்டு; சிந்திக்க வைக்கும் கதையம்சம் உண்டு. படிக்க ஆரம்பித்தால் முடித்துவிட்டுத்தான் மறுவேலை பார்க்க முடியும். அந்த அளவுக்கு நாடகத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்கிறார் கே.பி. படிப்பவரையும் அந்தக் குடும்பத்தில் ஓர் உறுப்பினராக்கி விடுகிறார். இந்த நாடகத்தில் காட்சிக்குக் காட்சி கே.பி. டச் மிளிர்வதை உணரமுடியும்.
சீனியர் ஓவியர் கோபுலுவின் உயிரோட்டமுள்ள சித்திரங்கள் நாடகாசிரியரின் கற்பனை கதாபாத்திரங்களை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துவதையும் நீங்கள் காணலாம்!
200
176