விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
கிரேஸி மோகனின் பெரும்பாலான நாடகங்கள், சிசுவேஷன் காமெடி வகையைச் சேர்ந்தவை. அதாவது, அந்த ரக நாடகங்களை மேடையில் பார்க்கும்போது மட்டுமே அதிகமாக ரசித்துச் சிரிக்க முடியும். வசனங்களைப் படிக்கும்போது முழுவதுமாகப் புரிந்துகொண்டு ரசிக்க முடியாது.
படித்தாலும் விழுந்து விழுந்து சிரித்து ரசிக்க முடிகின்ற கிரேஸி மோகனின் ஒரு சில நாடகங்களில் ஜுராஸிக் பேபியும் ஒன்று. மனக்கண்ணில் காட்சியை ஓடவிட்டபடியே இந்த நாடகத்தின் வசனங்களைப் படித்தால், வாய்விட்டுச் சிரிக்காமல் இருக்க முடியாது.
நகைச்சுவைக்கு மிகைப்படுத்துதல் இன்றியமையாத ஒன்று. ஜுராஸிக் பேபியில் அதன் எல்லைக்கே சென்றுவிட்டார் நாடகாசிரியர்.
ஏதோ ஒரு சூரணத்தை சாப்பிட்டு விட்டதன் விளைவாக அந்தத் தம்பதிக்குப் பிறக்கும் குழந்தை எடுத்த எடுப்பிலேயே வாலிபனாக உருவெடுத்துவிட, விசில் அடித்துக் கொண்டும் எதிரில் இருப்பவர்களை கன்னத்தில் அறைந்துகொண்டும் அந்தக் குழந்தை அடிக்கும் லூட்டிகள் படிக்கும்போதே வயிற்றைப் புண்ணாக்கி விடக்கூடியவை!
பேபியைத் தொட்டிலில் படுக்க(உட்கார) வைத்து, பாட்டுப் பாடி தூங்கச் செய்வதும், மசால் தோசையை ஊட்டி விட்டு பெரிய சைஸ் ஃபீடிங் பாட்டிலில் பால்(காபி?) குடிக்கச் செய்வதும்... இந்த நூலைப் படித்தால் நோய் விட்டுப் போகும்!