விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
இன்று எத்தனையோ அறிவியல் அற்புதங்களும் கண்டுபிடிப்புகளும் நம்மை வியப்பில் ஆழ்த்தி வந்தாலும், இத்தகைய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கும் ஒரு முதல் கண்டுபிடிப்பு என்று அறிவியல் உலகம் போற்றுவது சக்கரத்தைத்தான்!
கற்காலத்தில் உணவுத் தேவைக்காக மிருகங்களை வேட்டையாடியும், கிடைத்த தாவரங்கள், கனிகளை உண்டும் வாழ்ந்துவந்த ஆதிமனிதனின் முதல் முயற்சியாக அவன் கண்டுபிடித்ததும் இந்த சக்கரத்தைத்தான்!
காலத்தையும் காலச் சக்கரம் என்பார்கள். காரணம், அது சுழன்று கொண்டதே இருப்பதால்தான்! எனவே, மனித சமூகத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்ட சக்கரம் பண்டைய இந்தியாவில் வழிபடு பொருளாக உருவாகியிருக்கலாம். மேலும் ஆண்டவனைத் தொழுவதுபோல், அவன் வைத்துள்ள ஆயுதங்களையும் தொழும் மரபு தொன்றுதொட்டு வந்துள்ளது.
உலகம் முழுவதும் முருக வழிபாடு பரவியுள்ளதுபோல் வேல் வழிபாடும் பரவியுள்ளது. வேல் வழிபாடு என்பது, முருக வழிபாட்டின் ஓர் அங்கம்.
உலகைக் காக்கும் கடவுளாக வர்ணிக்கப்பட்டுள்ள விஷ்ணுவின் கையில் உள்ள சக்கரத்தை வழிபடுவது என்பது விஷ்ணு வழிபாட்டின் ஓர் அங்கம். இதுவும் தொன்றுதொட்டு வந்துள்ளது என்பதற்கான உதாரணங்களை வேதங்கள், ஆழ்வார் பாசுரங்கள் போன்றவற்றிலிருந்து இந்த நூலாசிரியர் எடுத்துத் தந்திருக்கிறார். ஆண்டவன் கை ஆயுதம் எதற்காக என்பதையும், அதை வழிபடும் முறையையும் எளிமையாக விளக்கியுள்ளார்.
சுதர்ஸனர் என்ற சக்கரத்தாழ்வாரின் கதைகள், வழிபாடு உள்ள முக்கியத் திருத்தலங்கள், வழிபடும் முறை, சுதர்ஸன ஹோமம் செய்வதன் பலன், ஹோமம் செய்யும் முறை, சுலோகங்கள், தோத்திரங்கள் என ஆன்மிக அன்பர்கள் விரும்பும் அனைத்தும் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.