விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
வேதம் தமிழ் செய்த மாறன் என்றபடி, தமிழ்மறையை ஈன்ற தாயாக நம்மாழ்வாரைப் போற்றும் வைணவ உலகம், அந்தத் தமிழ்மறையை பாலூட்டி சீராட்டி வளர்த்த செவிலித் தாயாக ராமானுஜரைப் போற்றுகிறது.
கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவந்த தமிழ் மறைகளான ஆழ்வார்களின் திவ்வியப் பிரபந்தங்களை, பெரும்பாடுபட்டுத் திரட்டி, அவற்றை மீண்டும் மக்களிடையே கொண்டுவந்தவர் நாதமுனிகள். அந்த வழியில், திருக்கோயில்களில் தமிழ்மறை முழங்க வித்திட்டவர் ஸ்ரீராமானுஜர். ஆளவந்தாருக்கு ராமானுஜர் செய்துகொடுத்த உறுதிமொழிகளில் ஒன்று, ஆழ்வார்களின் பிரபந்தப் பாசுரங்களை பண்ணோடு ஆலயங்களில் ஒலிக்கச் செய்வது. இதை ராமானுஜர் நிறைவேற்றி வைத்ததால்தான், வைணவ ஆலயங்களில் தமிழ் மறை இன்றளவுக்கும் ஒலித்துவருகிறது.
கி.பி.1017ல் அவதரித்த ஸ்ரீராமானுஜரின் எளிய தத்துவங்களையும் சமூகக் கோட்பாடுகளையும் எல்லோரும் தெரிந்து கொள்ளும் வண்ணம் இந்த நூலை படைத்திருக்கிறார் எஸ்.லெக்ஷ்மிநரசிம்மன்.
ஸ்ரீராமானுஜருடைய வாழ்க்கை வரலாறு இந்த நூலில் அழகாகக் சித்திரிக்கப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு, ஓர் அரசன்... தன் அரண்மனை அதிகாரி ஒருவன், அரண்மனை சேவக காலம்போக மீதி நேரத்தில் ராமானுஜருக்குத் தொண்டு செய்ததை மெச்சி, அவனை அரண்மனை சேவகத்திலிருந்து விடுவித்ததுடன் சம்பளத்தைத் தவறாது அவன் இருக்கும் இடத்துக்கு அளிக்கிறான். அதிகாரியோ அந்த சம்பளப் பணத்தை ராமானுஜரின் மடத்துக்கே அளித்துவிடுகிறான். இதைக் கேள்விப்பட்ட ராமானுஜர், உழைக்காமல் சம்பளம் பெறுதல் தகாது என்று சொல்லி, பணத்தைத் திருப்பிவிடச் சொல்கிறார். இதைக் கண்ட அரசன் இப்படியும் ஒரு தர்மாத்மாவா! என்று வியக்கிறான்.
இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கும் இப்படிப்பட்ட சம்பவங்கள், எல்லோர் மனதிலும் தர்ம சிந்தனையை விதைக்கும். நேர்மையான வாழ்க்கையை வாழ, எளியோரை அரவணைத்துச் செல்லும் சமத்துவ நோக்கோடு உலகை அணுக, ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கை வரலாறு நமக்கு உத்வேகம் தரும்.
இந்த நூலின் மூலம் உயர்ந்த தர்மத்தை நம் வாழ்வில் கடைப்பிடிக்கக்கூடிய நெஞ்சுரமும், மனக்கட்டுப்பாடும் வளரும்.